சேகரும் ராஜாவும் மாலை நேரம் தேநீர் அருந்திவிட்டு சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் தேநீர் கடைக்காரன் தேனீர் நன்றாகப் போட்டதாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் .
மாலை நேரக் காற்று இதமாக அடித்துக் கொண்டிருந்தது. சாலை வழியாக நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் பார்த்த காட்சி அவர்களை உலுக்கியது. அவர்கள் செல்லும் வழியில் இரண்டு மூன்று நத்தைகள் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. தன் எச்சிலைச் சாலை வழியே கோடு போட்டுக் கொண்டு தன் முகத்திற்கு மேலே இருந்த கொம்புகளை ஆட்டி ஆட்டி அந்த நத்தைகள் சென்று கொண்டிருந்தன.
கிராமத்தில் இருந்தவர்களுக்கு அந்த நத்தையைப் பார்த்ததும் ஒரு உற்சாகம் ஏற்பட்டது . அதைவிட இந்த நத்தையை யாரும் மிதித்து கொன்று விடுவார்களோ? இல்லை வேறு வாகனங்கள் வந்து ஏற்றி விடுமோ? என்ற பயம் அவர்களுக்கு இருந்தது . சாலை வழியே செல்லும் நத்தையை வேறு வழியில் எடுத்து விடலாமா ? என்று யோசித்தார்கள். தள்ளி விடுவதற்கு அவர்களுக்கு முடியவில்லை. அதனுடைய பயணத்தை நாம் ஏன் தடுக்க வேண்டும்? என்றான் ராஜா
” நீங்க சொல்றதும் சரிதான்’’ என்றார் சேகர்.
” சரி என்ன பண்ணலாம். இந்த நத்தைகள் இந்தச் சாலை கடக்கிற வரைக்கும் நாம் இங்க இருப்போம். வாகனம் வந்தாலும் இல்ல மனுசங்க தெரியாம அதை மிதிக்கவந்தாலும் நாம அவங்க கிட்ட சொல்லி இந்த நத்தைகளை நாம எப்படியாவது காப்பாத்தி ஆகணும் ” என்று சொல்லி இருவரும் அங்கே அமர்ந்தார்கள்.
அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மனிதர்களை மறித்து நத்தைகள் இருக்கு தள்ளிப் போங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அந்த இரண்டு மூன்று நத்தைகளும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தன. அதைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
” நான் பாத்ரூம் போயிட்டு வரட்டுமா? என்று ராஜா கேட்க
“நானும் வரேன்”
என்றார் சேகர்
” இல்ல ரெண்டு பேரும் போனா இந்த நத்தைகள யார் பாக்கிறது? அதனால நீங்க போயிட்டு வாங்க நீங்க போனதுக்கு அப்புறம் நான் போறேன்”என்று ராஜா சொல்ல
“அதுவும் சரிதான் ” என்று சேகர் அமர்ந்திருந்தார்.
ராஜா. பாத்ரூம் போய் வந்ததும் சேகர் போய் வந்தார். இப்படியாக இருவரும் அந்த நத்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்கள். இதைப்பார்த்த அந்த வழியாகச் சொல்பவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.
‘டிராபிக்கில் கூட போலீஸ் நிக்கறது இல்ல. ஒரு சின்ன உசுருகளை காப்பாத்துறதுக்கு இந்த இரண்டு மனுஷங்க எவ்வளவு பாடுபடுகிறாங்க”,என்று வழிப்போக்கர்கள் பேசிக் கொண்டு சென்றார்கள்.
ஒரு வழியாக அந்த நத்தைகள் சாலையைக் கடக்கும் வரை இருவரும் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நத்தைகள் சாலையைக் கடந்து சென்று விட்டன. இனி இந்த நத்தைகளுக்கு எதுவும் ஆகாது. சரி போகலாம்”
என்று இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு, இன்னும் சில நத்தைகள் புல் வெளியிலிருந்து மெல்ல மெல்ல சாலைக்கு வந்தன.
சேகர், ராஜா போல வேறு யாராவது இந்த நத்தைகளைக் காப்பாற்ற வரலாம்.