செய்திகள்

நதிநீர் பிரச்சினை: கேரள அதிகாரிகளுடன் தமிழக குழு பேச்சுவார்த்தை

சென்னை, செப்.11-

பரம்பிக்குளம்–ஆழியாறு, பாண்டியாறு–புன்னம்புழா, சிறுவாணி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் இன்று தமிழக அதிகாரிகள் குழு திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழகத்துக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே, சிறுவாணி, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்–ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்க 2 அரசுகளுமே முடிவு செய்துள்ளன. அந்த அடிப்படையில் கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கேரளாவுக்கு சென்றார். அங்கு திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தை ஆய்வு செய்ய 2 மாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தையும் நிறைவேற்ற தனி குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து திட்டம் நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், ஆனைமலையாறு, நல்லாறு, நீராறு, சிறுவாணி நதிகள் தொடர்பான பிரச்சினைகளும் இந்த குழுக்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கும் அதே வழியில் தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் கே.மணிவாசன் தலைமையிலும், கேரள நீர்வள ஆதாரத்துறை செயலாளர் பி.அசோக் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த 2 குழுக்களின் முதல் கூட்டம் கடந்த டிசம்பர் 12ந்தேதி சென்னையில் நடைபெற்றது. பரம்பிக்குளம்–ஆழியாறு நதிநீர் ஒப்பந்தத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அதை சிக்கலில்லாமல் மாற்றி அமைப்பது ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

5 பேர் குழு

இந்த நிலையில் இந்த குழுக்களின் 2-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் கே.மணிவாசன், காவிரி தொழில்நுட்ப பிரிவுத்தலைவர் சுப்பிரமணியன், பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, கண்காணிப்பு பொறியாளர் முனவூர் சுல்தானா, பாண்டியாறு-புன்னம்புழா திட்டக்குழு உறுப்பினர் தமிழரசன், கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், கோவை மண்டல நீர் ஆதாரத்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாத், பரம்பிக்குளம்–ஆழியாறு வட்டார உதவி பொறியாளர் (நீர் ஆதாரத்துறை) கார்த்திகேயன், டான்ஜெட்கோ செயற்பொறியாளர்கள் பாபு, ரமேஷ் ஆகியோர் திருவனந்தபுரம் வந்தனர்.

திருவனந்தபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பரம்பிக்குளம்–ஆழியாறு, பாண்டியாறு–புன்னம்புழா, ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு, மற்றும் சிறுவாணி நதிநீர் தொடர்பாக உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *