நாடும் நடப்பும்

நதிக்கு மனித உரிமை: நியூசிலாந்தில் புதுமை

விவசாயத்திற்கும் மனிதன் உயிர் வாழவும் மிக அவசியம் தேவைப்படும் நீர்வளத்தை பண்டை காலத்தில் தமிழகம் மிக முக்கியத்துவம் தந்திருப்பதற்கு சான்று, பல நதிகளின் பெயர்களில் பெண் தெய்வங்கள் இருப்பது தான்.
கங்கை, காவிரி, சரஸ்வதி என பெயர்கள் சூட்டியதில் நமக்கு சுட்டிக் காட்டப்படும் உண்மை. பெண்கள் பூமிக்கு கண்கள், அவர்களே பூமிக்கு ஆதாரமாக விளங்குவதாக கவிஞர்கள் கூறுவது உண்டு. அது போன்றுதான் நதிகள் என்பதை சுட்டிக்காட்டுவது போல் நதிகளுக்கு பெண்கள் பெயர் கொடுத்து அழைத்திருக்க வேண்டும்.
நீரின்றி அமையாது உலகு என்று சுட்டிக்காட்டுகிறார் திருவள்ளுவர். இந்த நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சத்திய வார்த்தைகளுக்கு ஏனோ நாம் முக்கியத்துவம் தராமல் இருந்து வருகிறோம். பெண் தெய்வங்கள் பெயர் சூட்டிய பிறகு அதே நதிகளின் புனிதத்தை உணராமல் நாமே மாசுபடுத்தி வருகிறோம்.
தொழில் வளர்ச்சிகள் காரணமாக வெளியேறும் நச்சுப்பொருட்களையும் மக்காத குப்பை கூளங்களையும் நதிகள், நீர்நிலைகளில் சென்றடைய வைத்து, கடந்த 200 ஆண்டுகளின் மிகப்பெரிய களங்கத்தை நீர்நிலைகளுக்கு ஏற்படுத்தி, அதை கடலில் கலக்க விட்டு அதையும் மாசுபடுத்தி விட்டோம்.
கடல் நீர் வெப்பத்தில் ஆவியாகி சுத்தமான மழை நீராக பொழிந்து வருவதால் இன்றும் நமக்கு ஓரளவு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.
ஆனால் விவசாயத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும், வளர்ந்துவரும் ஜனத்தொகை பெருக்கத்திற்கும் தேவையான சுத்தமான குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே இருப்பதை பார்க்கிறோம்.
காசு கொடுத்து நீர் வரவழைப்பதை இனி வரும் தலைமுறை சர்வ சாதாரணமான ஒன்றாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த நூற்றாண்டில் நீர் நிலை எப்படி இருக்கும்? என்ற மிகப்பெரிய கேள்விக்குறி நம்முன் எழுகிறது.
தண்ணீரின் அருமையை உணர்ந்த உலக நாடுகளில் நியூசிலாந்து தனித்துவமான ஒன்றாக இருக்கிறது. இயற்கை எழிலை அடுத்த நூற்றாண்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் உலக நாடுகளில் நியூசிலாந்து முன்னணியில் இருக்கிறது.
அந்நாட்டு நீர்நிலைகள் கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதகத்தை சந்தித்து வருவதாக ஒரு ஆய்வு அறிக்கை வெளிவர கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை நதி நீரை பாதுகாக்க அதிரடியாக எடுத்தும் வருகிறார்கள்.
மீன் பிடித்தும் நீச்சல் அடித்தும் விளையாடி மகிழ்ந்த நீர்நிலைகளை மீண்டும் பழைய பொலிவுடன் மிளிர வைக்க அந்நாடு பல அவசரகால சட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
சமீபத்தில் வாங்கானுய் நதிக்கு [Whanganui River] ‘ மனிதன்’ என்ற அந்தஸ்தை சட்ட ரீதியாக தந்துள்ளனர்!
நம் நாட்டைப் போன்ற பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த நியூசிலாந்தும் தொழில்புரட்சியின் காரணமாக நதி நீர் மாசு ஏற்பட்டது. சல சலவென ஓடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நதிகளை கொண்ட அந்த நாட்டில் அவை களங்கிய மாசுடன் அசுத்தமான நீர் நிலைகளாக மாறி வருவதை உணர்ந்த சிலர் வித்தியாசமான வழக்கை தொடர்ந்து, மனிதனுக்கு இணையான அடிப்படை உரிமைகளை நதிக்கு பெற்றுத் தந்து விட்டனர்.
இந்த வாங்கானுய் நதியே அந்நாட்டின் 3–வது மிகப்பெரிய நதியாகும். அந்த நதியின் உரிமைகளை போற்றிப் பாதுகாக்க இரு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டபூர்வமாக அந்த நதியின் நீண்ட பாதை எங்கும் சந்திக்கும் “இன்னல்’’களுக்கு குரல் கொடுப்பார்கள். ஒருவரை அடித்தால் எப்படி குற்றமாக கருதப்படுகிறதோ, அதே சட்ட ஆதரவு லாங்கானுய் நதிக்கும் கிடைத்துவிட்டது. ஆகவே அந்த இரு நபர் குழு இந்த நதிக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் மாசு தூசு பிரச்சினையால் களங்கம் ஏற்பட்டாலும் அதன் மனிதாபிமான உரிமைகளை சுட்டிக்காட்டி தடுக்க முடியும்.
இந்த சட்டப்பூர்வ அறிவிப்பு வர கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு ஜெரார்ட் ஆல்பர்ட் என்பவர் வாதாடி இருக்கிறார். அவர் இந்த நதியில் சிறுவயதில் நீச்சலடித்து விளையாடியும் மீன் பிடித்து ரசித்து ருசித்தவர் ஆவார்.
அவரது இளமைக்கால ஆருயிர் நண்பனாக பார்த்த காரணத்தால் அந்த நதிக்கு இப்படி சட்டப்பூர்வமாக ஒரு நபராக புது அந்தஸ்தை வாங்கி தந்துள்ளார்.
நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே ‘நடந்தாய் வாழி காவிரி’ என்றும், நதிகளில் நீராடினால் நமது ஏழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரமாகவே வாழ்ந்து வந்தோம்.
எல்லா புண்ணிய நதிகளும் வந்து சேருவது கடலில் தான் என்று புரிந்து கொண்ட நாம், நீரின்றி உலகம் இயங்காது என்பதை புரிந்து கொண்டாலும் அதை மாசின்றி சுத்தமாக வைத்து இருக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பது சரியில்லை. அன்றே நதிகளின் புனிதத்தை உணர்ந்த நாம் அதை இனியாவது சரிவர பராமரித்து அதன் சிறப்பை வரும் நூற்றாண்டுகளில் மேம்பட வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *