கோவிந்தன் சுயமாக தொழில் செய்பவர். தனது தொழிலில் நேர்மையாக இருப்பவர். பணம் ஓரளவிற்கு சேமித்து வைத்துள்ளார். தனது மகன் விருப்பப்படியே படிக்க வைத்தாலும் மகனுக்கு தொழில் புரிவதிலேயே நாட்டம் இருப்பதைக் கண்ட கோவிந்தன் மகன் ராமனை அழைத்து ஓய்வு நேரத்தில் வந்து தொழிலைக் கற்றுக் கொள் என்றார். கம்பெனிகளில் ஆர்டர் எடுக்க செல்லும் போது தனது காரில் தான்செல்வார். மிகவும் முக்கியத்துவம் தந்து பொருட்களை தயாரித்து ஆர்டர் கொடுத்தவரிடம் நல்ல பெயர் ஈட்டுவார். லாபம் அதிகம் எதிர்பாராமல் தரமான பொருட்களை உபயோகிப்பதால் இவருக்கு தரும் ஆர்டர் தவறாமல் வந்து கொண்டே இருந்தது.
அன்று ஒரு கம்பெனிக்கு சென்று கொண்டிருந்த கோவிந்தன் கண்ணில் ஒரு நிகழ்வு பட்டது. அதாவது ரோட்டின் நடுவில் ஒரு பையன் எதிரும் புதிருமான வண்டிகள் நடுவே நின்று போவது அறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். வண்டிகள் தனது ஒலிப்பாணை நன்கு அலற விட அந்த இடமே ஒலி மாசினால் சீரடைந்தது.
இதைக் கண்ட கோவிந்தன் வண்டியில் இருந்து இறங்கி வேகமாகச் சென்று அந்தப் பையன் கையைப் பிடித்து இழுத்து தன் வண்டிக்கு கூட்டி வந்தார். பையனின் நிலைமை அறிந்து அவனிடம் சைகையால் பேச அவன் தனக்கு கேட்கும் திறன் கிடையாது என்றதும் கோவிந்தன் சைகையால் அவன் விலாசம் கேட்டு அவன் வீட்டிற்கு அவனை அழைத்துச் சென்றார். வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசிய போது பையனுக்கு பிறவி முதலே கேட்கும் திறன் கிடையாது மற்றும் பேச்சு குழறும் பதட்டத்தில் அவன்பேசுவது புரியாது என்று கூறியதும் எல்லாவற்றையும் உணர்ந்தவர், மறு நாள் முதல் பையன் ஜெகன் பள்ளி சென்று வர வாகனம் ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் படிப்புச் செலவையும் மேற் கொண்டார். பையன் அவரிடம் மிகுந்த அன்புடன் வலம் வந்தான். அவரிடம் அவரது புகைப்படம் ஒன்றை வாங்கி தனது பையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். கோவிந்தன், ஜெகன் படிப்பு முடிந்ததும் தனக்குத் தெரிந்த கம்பெனியில் வேலை வாங்கித் தந்தார்.
ஜெகன் வேலைக்குச் சென்ற பின் கோவிந்தன் ஜெகன் தொடர்பில் சற்று சுணக்கம் எற்பட்டது. ஜெகன் இதன் பின் தன் வேலையே குறியெனக் கொண்டு பல அரசுத் தேர்வுகள் எழுதி அரசாங்க வேலையில் சேர்ந்தான். ஆனால் ஜெகன் தனக்குக் கிடைத்த வேலை பற்றி கோவிந்தனிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் படத்தை மட்டும் பையில் வைக்கத் தவறியதில்லை ஜெகன்.
கோவிந்தன் ஜெகன் பற்றி அவ்வப்போது நினைத்தாலும் தான் சென்று விசாரிக்க அவர் மனம் விரும்பாததால் தொடர்பு என்பது கேள்விக் குறியானது. கோவிந்தன் மகன் ராமனிடம் சற்று சோர்வாக உள்ளது என்றார். உடனே ராமன் சற்றும் தாமதியாது கோவிந்தனை அவர்களது குடும்ப மருத்துவரிடம் கூட்டிச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் பயப்படும்படி ஒன்றும் இல்லை. நான்தரும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்றார். இனிமேல் சற்று கடினமான வேலைகளை தவிர்த்தால் நல்லது என்றார்.
இதற்குப் பிறகு ராமன் கம்பெனியின் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். கோவிந்தன் சற்று குணமாகி எப்போதாவது கம்பெனிக்கு வந்து விட்டுச் செல்வார். அதிக நேரம் தங்க மாட்டார். ராமன் தனக்கு ஏதும் தேவைப் படுமென்றால் மட்டுமே அப்பாவை கேட்பார். நாட்கள் செல்ல, செல்ல ராமன் கை தேர்ந்து தொழிலில் சிறந்து விளங்கினான். கோவிந்தன் எவ்வளவு சொல்லியும் இன்னொரு கார் வாங்க மறுத்தார்.
அன்று காலையில் திடீரென மயங்கி விழுந்த கோவிந்தனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் தேறி வந்தவர் ஒரு நாள் எல்லோரையும் மறந்து பூவுலகைத் துறந்தார். இதன்பின் ராமனுக்கு பொறுப்பு அதிகமானது. ஓய்வு என்பதையே மறக்கும் நிலமை வந்தது சில நாட்களில் ராமனுக்கு.
அன்று காரில் சென்ற ராமன் ரோட்டின் ஓரத்தில் திடீரென ஒருவர் கிழே விழுவதைக் கண்ட ராமன் காரிலிருந்து இறங்கி விழுந்தவரைத் தூக்க, அப்போது அங்கிருந்த ஆணியில் மாட்டி அவர் சட்டை கிழிய, ராமன் உடனே அவரை கைத் தாங்கலாக அழைத்து வந்து காரில் அமர்த்தி சட்டையைக் கழற்றும் போது அதிலிருந்து விழுந்த புகைப்படத்தைப் பார்க்க, உடனே அந்த மனிதர் தயவு செய்து படத்தைத் தாருங்கள் என்று கதற, ராமன் தருகிறேன் ஒன்றும் செய்ய மாட்டேன்என்று கூறி படத்தைப் பார்த்ததில் அது தனது அப்பாவின் படமாக இருந்தது கண்டு அந்த மனிதரிடம் விவரம் கேட்க, அவர் தனது பெயர் ஜெகன் என்றும் கோவிந்தன் ஐயா புகைப்படம் என்று அனைத்தையும் பேப்பரில் எழுத, ராமன் சற்று கண் கலங்கி நான் அவர் மகன் ராமன் என்று கூற, ஜெகன் அப்பாவைத் தொடர்ந்து மகனும் என்னை காப்பாற்றினார்கள். இது நான் தொலைத்த உறவை தொடர நடந்த நிகழ்வோ அல்லது அப்பாவை தொடர்ந்து பொது நல சேவையில் மகன் என்றதும் ராமன் அப்பா கூறும் ஜெகனா நீ, தற்போது அப்பா இல்லையே என்று கூற, கேட்ட ஜெகனின் அழுகைக் குரல் சுற்றுப் புறத்தையே கலங்க வைத்தது. இனிமேல் நீ எங்கள் குடும்ப உறுப்பினர் என்று சைகையால் சொல்ல, அலுவலகத்தில் நடந்த ஒரு செய்கையால் நான் தன்னிலை மறந்து விழுந்து விட்டேன் என்று ஜெகன் சைகையால் கூற, ராமன் அவனைக் கட்டிப்பிடித்தார். தொடர்ந்தது ஒரு நட்புச் சங்கிலி.
#சிறுகதை