சிறுகதை

நட்பின் ஆழம் நண்பர்களே அறிவர் | டிக்ரோஸ்

கதாபாத்திரங்கள்

புஸ்சா –- பாம்பு

என்ஓ – – பூனை

புல்லீ – – நாய்

மற்றும் நீங்களும் நானும் தான்!

* * *

காட்சி 1

(பசுமைக் காட்டில் ஓர் மரக்கிளையில்)

 

புஸ்சா எனப்படும் சமீபமாக அவ்வப்போது கண்ணில் படும் என்ஓ பூனையை நெருங்கும்போதெல்லாம் நாக்கில் எச்சூற, பசி வயிற்றில் ஏதோ செய்ய உடலே இங்கும் அங்கும் அசைய மனம் கட்டுப்பாடின்றி தன் போக்கில் காற்றில் அறுந்த பட்டமாகுகிறது!

லட்டு மாதிரி இருக்கும் இந்த பூனைக்குட்டியை அப்படியே ‘ லபக் ‘ என்று ஒரே முழுங்கில் சாப்பிட்டு தன் உடலெங்கும் அதன் சுவையால் உண்ட மயக்கத்தில் கிறங்க வேண்டும் என ஆசைப்பட்டது.

* * *

காட்சி 2

இடம்: பசுமை காட்டின் விளிம்பில், மாலை நேர மயங்கிய ஒளியில்…

 

‘டேய் பல்லீ எங்க ஓடுற’, இது என்ஓ – பூனை.

‘நல்ல குச்சியா தேடுறேண்டா. அதை வச்சு உன்னை அடிச்சி ஓட ஓட விரட்ட தான்…’ என்று கூறியபடி நான் பல்லி இல்லடா புல்லீ…’ என திரும்ப மிரட்டியது.

என்ஓவும் புல்லீயும் வனப்பள்ளியில் அனுபவ பாடம் படிக்கும் சக மாணவர்கள். போட்டி பொறாமை இருக்கிறதோ இல்லையோ லூட்டிச் சண்டைகள் நிரம்பவே இருப்பதால் ஓடி திரிவதும் கட்டிப்புரண்டு தாக்கி பிராண்டிக் கொள்வதும் கிடைத்த மரத்தின் மீதேறி கிளைக்கு கிளை தாவுவதுமாய் சோம்பேறித்தனமில்லா குழந்தைத்தன குசும்புகள் நிறைந்த வாழ்வு!

அன்று என்ஓவுக்கு ஒரு புதிய திட்டம் தோன்றியது. அதன்படி இங்குமங்குமாக ஓடுவது. நாயாய் புல்லீயை அலையவிட்டு நாலு காலும் வலிக்க ஒரு ஓரமாக சோர்ந்து படுக்க வைத்து விடுவது!

முதலில் தன்னை துரத்த வேண்டுமே. அதற்கான ஆயுதமே நக்கல் பேச்சு. முதல் அஸ்திரமாக புல்லீயை பல்லீ என கிண்டலாக அழைத்து உசுப்பேத்திவிட்டான்.

இப்படியாக ஓடியாடி களைத்துவிட்ட இரண்டு குட்டிகளுமே வனவிலங்குகள் நடமாடாத பாதுகாப்பான பகுதியில் தூங்கச் சென்று விட்டனர்.

மறுநாள் காலை ‘சலசல’வென ஓடிக்கொண்டு இருந்த நதியில் முங்கி எழுந்து விட்டு அருகே தோட்டத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு புதிய எழுச்சியோடு சூழ்ச்சி காட்சிகள் அரங்கேற இருந்த பசுமை காட்டின் நடுவே இருந்த மர நிழல் அருகே விளையாட வந்தனர்.

முன்னால் ஓடிக்கொண்டிருந்த என்ஓ சிறு கட்டை ஒன்றை தன் பின்னங் கால்களால் எட்டி உதைக்க புல்லீயை சிராய்த்தபடியே பறந்தது!

புல்லீ சும்மா விடுமா? நாலு கால் பாய்ச்சலில் ‘விட்டேனா பார்’ என்று தாக்கப் பாய்ந்தது.

இந்த நாய் – பூனைச் சண்டைக் காட்சியின் நடுவே தான் வில்லனாய் புஸ்சா நுழைகிறான்.

இரண்டில் ஒன்று வீழ்ந்தாலும் தன் பசிக்கு சோறு என்பதால் மிகக் கவனமாக அந்த மோதல் காட்சியில் லயித்து காத்திருந்தது.

இடைவேளை வந்தால்தானே, பாப்கார்ன், பப்ஸ் எல்லாம் வாங்கி சாப்பிட முடியும்! காத்திருப்பதும் சுகமான சோகம்தான் என்ற உணர்வோடு ஏக்கத்துடன் ஒரு மரத்தில் மிகமெல்ல, சருகு கூட அசைத்து விடாமல் மெல்லத் தன் உடலை ஓர் மரக்கிளையில் சுற்றி வைத்துக் கொண்டு நாக்கை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது புஸ்சா என்ற பாம்பு.

* * * 

காட்சி 3

 

மதிய உணவு வேளை, புஸ்சா இருக்கும் மர நிழலில்…

துரத்தி துரத்தி விரட்டியதில் களைத்துப்போய் காடு தந்த இலவச மதிய உணவு பதார்த்தங்களை உண்ட மயக்கத்துடன் மர நிழலில் ஒதுங்க வருகிறார்கள் என்ஓவும் புல்லீயும்.

‘டேய் புல்லீ, இங்கே பள்ளம் இருக்கு பார்த்து’, என எச்சரித்து விட்டு, ‘அந்தப் பள்ளத்தை சுற்றி ஓடி பத்திரமாக மர நிழலில் தஞ்சம் புகுந்தது என்ஓ.

எச்சரிக்கைக்கு நன்றி சொல்லியபடி தூக்கக் கலக்கத்துடன் வாலை சுருட்டி மரத்தடியில் படுத்துக் கொண்டு என்.ஓ.வின் யோகாசன பயிற்சி போன்ற சேட்டைகளை பார்த்தபடி சற்றே கண் அயர்ந்தது.

என்ஓவுக்கும் வயிறு முட்ட சாப்பிட்டதுடன் ஓடிஆடி ஏற்பட்ட களைப்பால் அருகேயே கால்களை வான் நோக்கி வைத்தபடி ஒரு பெரிய கொட்டாவியை விட்டுவிட்டு சோம்பல் முறித்தபடி தூங்கிவிட்டது.

இதற்கெல்லாம் தானே புஸ்சா காத்திருந்தது! அதன் வேதனை இரட்டிப்பானது! ஒரு பக்கம் புல்லீ, மூக்குச் சப்பை என்றாலும் எத்தனை ‘கொழுக்கு மொழுக்கு’! மறுபக்கம் ‘என்ஓ’ என்ன ஒரு பளபளப்பு, உடலெங்கும் ‘பேரக்ஸ் பேபி’ போன்ற வனவனப்பு!

இரண்டில் ஒன்றைத் தான் சாப்பிட முடியும் படியான தனது உடலை படைத்த இயற்கையை நொந்தபடி மீண்டு எந்த சரசரப்பு சத்தமுமின்றி களப்பணிக்கு இறங்கியது.

 

பசி என்ற நிலையில் தன் மனம் இதுவா அதுவா? என விவாதித்துக் கொண்டிருக்க உடல் இந்த பக்கமும் அந்த பக்கமும் என அலைந்தபடி தன் மன வேதனையோடு மரத்தை ஒரு வட்டமடித்தபடி நிலத்தை நோக்கி நகர்ந்தது.

அது எப்படி எந்த சலசலப்புமின்றி? என்று கேட்கிறீர்களா? அதிக இலைகள் இல்லா மரம் என்பதால் சருகுகள் எல்லாம் கீழே விழுந்து இரண்டு குட்டிகளுக்கும் மெதுமெதுப்பான விரிப்பாய் இருந்தது.

சமீபமாக காற்றில் அதிகமாக இருந்ததால் காய்ந்த சருகுகள் இப்படி விழுந்துவிட்டன. அருகே இருந்த பள்ளத்திலும் நிரம்பவே இருந்து.

புஸ்சா எந்த சத்தமும் போடாமல் வேர்ப் பகுதியில் தலையை வைத்த போது புல்லீயின் காது சிலிர்த்தது. அதைக் கண்ட புஸ்சாவுக்கு இதென்ன வம்பா போச்சு; முழிச்சிடுச்சினா சேசிங் சீன் வரும். மூச்சு வாங்க ஓடிப் பிடிச்சு வேட்டையாடனுமே. அந்த வேலை செய்யும் எண்ணம் இல்லாததால் தன் விழியை என்ஓ பக்கம் திருப்ப அதை நோக்கி நாக்குச் சிலிர்க்க ஊர்ந்தது.

பசி கிள்ளியதாலோ என்னவோ தரையில் தொண்டைப்பகுதி பட்டவுடன் விசை அழுத்தப்பட்ட வேகத்தில் ஸ்டார்ட் ஆகும் பைக் போல் அதன் வேகம் அதிகரித்தது.

திடீரென ‘பொத்’ என்ற சத்தம்; அந்தக் காட்டின் நிசப்தத்தை கலைத்தது.

புல்லீயும் என்ஓவும் என்னவோ ஏதோவென்று பயத்தில் மிரண்டு விழித்துக்கொண்ட நேரத்தில் தான் புஸ்சாவுக்கு புரிந்தது. தொப்பென்று விழுந்தது தனது வால் பகுதி தான் என்று!

தலை தெறிக்க நாய் ஒரு பக்கம் ஓடுவதை பார்த்த என்ஓ ஏனோ அதைப் பின்தொடர்ந்து ஓடாமல் மரத்தின் பின்புறமாக ஓடி மறைந்து நின்று புஸ்சா எந்த பக்கமாக தாக்க வருகிறது என்று நோட்டம் விட்டது.

‘சொதப்பி விட்டாயே புஸ்சா’ என மனம் நொந்தபடி மதில் மேல் பூனையாய் புல்லீயா? என்ஓவா? எதை பிடிக்க என நொடிப்பொழுதில் முடிவெடுக்கப் யோசித்தது. மின்னல் வேகத்தில் குட்டி பப்பி புல்லீ எனக்கு வேண்டாம். என்ஓ தான் எனக்கு என்ற முடிவோடு ” சரட்’ என்று அதை நோக்கி விரட்டி ஓடியது.

என்ஓ இதை எதிர்பார்த்ததா இல்லையா? என்று விவாதிக்க நேரமில்லை. சாப்பாடு விஷயத்தில் நான் கரார் என்ற உணர்வோடு தப்பித்தோம்; பிழைத்தோம் என்று நிலத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடாமல் மரத்தில் வீம்பாய் கிளைகள் மீது தாவி ஒரு கிளையில் பம்மியது.

போடா புல்லீ, தப்பிச்சுக்கோ, மரமேறும் புஸ்சாவிடம் குஸ்காவாக்க விடமாட்டேன். இதோ இந்தக் கிளையில் இருந்து குதித்து தப்பி வந்து உன்னோடு சேர்ந்து கொள்கிறேன்’ என்ற நினைப்புடன் அங்கேயே இருந்தது.

புஸ்சாவின் பாம்புறிவுக்கு தன் ‘இரை அதே’ என்பது மட்டுமே கண்ணில் தெரிந்தது. அர்ஜுனர் வில் விடும் முன்பு மரக்கிளை, இலைகள் எதையும் பார்க்காமல் தன் குறியான பறவையின் கண் மட்டுமே கண்டார் அல்லவா? அதே மனநிலையோடு என்ஓவை மட்டும் குறிவைத்தபடி ‘சரசர’ என ஸர்ப்ப வேகத்தில் என்னை நெருங்கியது.

இயற்கையின் விதியில் யார் எதை செய்ய முடிகிறது? அந்த நேரத்தில் தான் என்ஓவின் விதியின் சதிலீலை துவங்கியது.

குதித்து தப்பிக்க நினைத்த என்ஓவின் கனவு தவிடுபொடியாகும் படி அது தாவித் தஞ்சம் புகுந்த மரக்கிளை ஏனோ தனது பாரத்தை தாங்கமுடியாமல் சாய்ந்ததை உணர்ந்தது.

நாள் முழுவதும் ஓட்டமும் நடையும் இருந்தும் கூடவே தேவையான அளவே உணவு என்று கட்டுப்பாடாக வளர்ந்து ஏன் எடை கூடி விட்டது என அழாத குறையாக ஏங்கியது.

தன் எடை கூடுதலாக இருந்த காரணத்தால் மரக்கிளை வளைந்து தன்னை புஸ்சாவிடமே கொண்டு சேர்க்கிறதே!

பழம் நழுவி பாலில் விழும் என்பதை அன்றுதான் தன் கண்முன் இரண்டு ருசிக்க தயாராக வந்து விட்ட உணவைப் பற்றி யோசித்த புஸ்சா, ஸ்விக்கி டெலிவரிக்கு ஐந்து நட்சத்திரங்கள் தந்துவிட்டு வந்த உணவு சுடச்சுட இருப்பதற்கு மேலும் 2 ஸ்டார் தர முடியாமல் தவிப்பது போல் தவித்துக் கொண்டிருக்கையில் பாலும் பழமும் கோப்பையில் விழுந்து, அதை ஓர் அழகி எடுத்து வந்து சாப்பிடுங்கள் என ஊட்டி விடுவது போலிருந்தது புஸ்சாவிற்கு!

‘என்ஓவுக்கு என்ன ஆச்சு என்று திரும்பி பார்த்த புல்லீக்கு அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சி அதிர்ச்சியைத் தந்தது.

உடனே சறுக்கியபடி பிரேக் அடித்து நின்ற வேகத்தில் திரும்பியது. புஸ்சாவின் வாயருகே என்ஓ நெருங்கிய காட்சியை பார்த்த படி அதை தடுக்க ஆயத்தமானது.

இயற்கை அற்புதமானது. கிளையின் ரப்பர் தன்மையால் வளைந்த பின் மீண்டும் தன் நிலைக்கே திரும்பும் அல்லவா? 6–ம் வகுப்பு விஞ்ஞானப் பாடம் தான், அங்கே நிரூபனமானது. வந்த வேகத்தில் திரும்பியபோது புஸ்சாவின் கோபம் கரைபுரண்டு ஓட, அதே வேகத்தில் அந்த மரக் கிளைக்கு தாவிச் சென்று ‘உஸ்புஸ்’ என சத்தமிட்டு என்ஓவையும் நெருங்கியது.

மரக்கிளையின் இழுமான விசை சக்தியால் அப்படி இப்படி ஆடிய ஆட்டத்தில் என்ஓவின் தலைச்சுற்றல் காரணமாக சிந்தனா சக்தி தடைபட்டது.

புல்லீயின் கதறல் சத்தம் வனத்தில் எதிரொலித்தாலும் அந்த நொடியில் யார் அங்கு நீதியை நிலைநாட்ட உதவ முடியும்?

புஸ்சா ஒரு வழியாக தன் பற்களை என்ஓ மீது பட வைத்து நொறுக்குத் தீனியாக மாற்றத் தயாராகிவிட்டது. நாக்கின் நீட்டு தூரத்தில் என்ஓ! இந்த நொடியில் தான் இயற்கை தன் வீச்சை மீண்டும் வெளிப்படுத்தியது.

பூமியின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்ட என்ஓவின் ‘கொழுகொழு’ உடம்பு புதிய வேகத்துடன் மண்ணில் விழுந்தது. தவறு மன்னியுங்கள். மண்ணில் அல்ல, அந்த பாதாளக் குழியில்!

குழியில் இலைச் சருகுகள் நிரம்பியிருந்ததால் பஞ்சு மெத்தையில் விழுந்தது போல் இருந்ததால் என்ஓவிற்கு அடி ஏதும் படவில்லை. மருத்துவச் செலவு மிச்சம் என்ற நினைப்பு தோன்றும் முன்பே அந்தப் பள்ளத்தின் விளிம்பில் எகிறிக் குதிக்க முயன்ற என்ஓவால் எதையும் பிடித்து வெளிவர முடியாமல் தவித்தது.

புஸ்வாவின் ஆசை தீர்ந்தபாடில்லை, ஆனால் விடாமுயற்சியாக மீண்டும் மண்ணில் இறங்கி வந்து பாதாளத்தின் அருகே வாயை திறந்து வைத்தபடி காத்திருந்தது.

சில நிமிடங்களுக்கு முன்பு என்ஓ ஒரு துண்டு மரக்கிளையை புல்லீ மீது எறிந்து விட்டு குதித்து ஓடி மர நிழலுக்கு வந்ததல்லவா? அதை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே. அதை வாயில் கவ்வியபடி வந்த புல்லீ பாதாள விளிம்பில் இருந்த புஸ்சாவை ஒரே அடியாக அடித்து, குப்பையை பெருக்கும் பானியில் தன் வாயில் இருந்த கிளையைக் கொண்டு புஸ்சாவை அங்கிருந்து இழுத்து சென்று பல மரங்களுக்கு அப்பால் இருந்த முட்புதரில் தூக்கி வீசியது.

அதிக தூரம் இல்லை என்றாலும் புஸ்சாவின் சருமம் அந்த முட்புதரில் கிழிந்து விடாமல் மெல்லத் தானே ஊர்ந்து வளைந்து நெளிந்து திரும்ப முடியும்.

அந்த அவகாச நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறியது. பள்ளத்தில் இருந்த என்ஓ.விற்கு குதித்து வெளிவர தன் வாயில் இருந்த சிறிய கிளையை வீசியது. அதைக் கொண்டு நெம்பி வர எடுத்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் போர் தொடுத்து தோல்வியையே கண்ட ராசாவின் மன நிலையை ஒத்திருந்தது.

புல்லீ கடைசி ஆயுதமாக அதே மரத்தில் ஏறி, அதே வளைவுத் தன்மை கொண்ட கிளையில் ஏறி அமர்ந்து ஊஞ்சல் ஆடிய வண்ணம் மரக்கிளை கொப்பையை உடைக்க முற்பட்டது.

இந்தக் காட்சிகளுக்கு என்ஓ சற்று அயர்ந்து மூச்சிரைக்க யோசனையில் மூழ்கிய நேரத்தில் தான் புஸ்சா மீண்டும் பள்ளத்தின் விளிம்பிலிருந்து பசிக்கொடுமையால் வாடி இருந்த ஒருவர் சுடச்சுட இட்லியை பார்த்த பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை என்ஓ பார்த்தது.

‘கடக்’ என்ற சத்தம் அந்த வனத்தின் நிசப்தத்தைக் கிழித்தது, அந்த ஒலியுடன் உடைந்து கீழே விழுந்த அந்தத் திடமான மரக்கிளையின் எடையுடன் புல்லீயின் எடையும் புஸ்சாவின் தலை முதல் பின் முதுகு வரை விழுந்ததில் அதன் கதை அக்கணமே முடிந்தது.

புஸ்வாவின் உயிரற்ற உடம்பு சரிந்து பள்ளத்தில் விழுந்தது. அதன் மீது ஏறித் தாவி குதித்து பள்ளத்தை விட்டு வெளிவந்த என்ஓ, புல்லீயின் மூக்கில் இடித்தபடி உருண்டு புரண்டு தப்பித்தோம்; பிழைத்தோம் என்று அம்மர நிழல் பகுதியை கூட இனி மிதிக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் ஓடி மறைந்தது.

பின்னாடி நாலு கால் பாய்ச்சலில் புல்லீ உன்னை விட்டேனா பார் என்ற புதிய வைராக்கியத்துடன் துரத்த….

பாம்பின் கால் பாம்பறியும் நட்பின் ஆழத்தை நண்பர்களே அறிவர் என்ற டைட்டில் கார்ட் ஓட

ரசிகர்களின் கைத்தட்டல்களுடன் காட்சிகள் மறைகிறது.

* * *

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *