சிறுகதை

நடைபாதையில் நடக்க முடியாதவர் – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் அமைந்துள்ள விசாலமான பூங்காவின் வாசலில் அமர்ந்திருந்தார் ஒரு காலை இழந்த ஒரு

மனிதர் . இடது பக்கம் வலது பக்கம் என்று கடைகள் இருந்தன. குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள். சாப்பிடும் ஐட்டம் என்று எல்லாம் அங்கே விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.

வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜெயக்குமாரும் முத்துவும் அந்தப் பூங்காவிற்கு சென்றார்கள். வெப்பம் கக்கும் வெயிலை மறந்து சன்னமாக தென்றல் வீசும் அந்த மாலை நேரத்தில் இருவரும் பூங்காவிற்குள் நுழைந்தார்கள்.

சந்தடிகள் நிறைந்த கடைகளுக்கு நடுவே இருவரும் நுழைந்து பூங்கா வாசலைக் கடந்த போது அந்த நடக்க முடியாத மனிதர் வாசலின் முன்னால் அமர்ந்திருந்தார்.

ஒரு கால் அவருக்கு இல்லாமல் இருந்தது கட்டைக்காலை நிமிர்த்தி வைத்திருந்தார்.

நான் உங்களிடம் சும்மா எல்லாம் யாசகம் கேட்கவில்லை. எனக்கு ஒரு கால் இல்லை என்பதைப் பாருங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அவர் அமர்ந்திருந்த தோரணை இருந்தது. அருகில் கட்டைக்கால் உடம்பில் ஒரு கால் இல்லாமல் இருந்தது .

வருகிறவர்கள்,போகிறவர்கள் எல்லாேரிடமும் அவர் கைநீட்டிக் கொண்டிருந்தார் .யாரும் அவரைச் சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

அம்மா, ஐயா என்று ஈனக்குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் யாரும் அவரைக் கண்டுகொள்ளாமல் சென்று கொண்டே இருந்தார்கள்.

நடைபாதையின் முகப்பு வாசலில் அவர் அமர்ந்திருந்ததால் சிலருக்கு அது எரிச்சலைத் தந்தது.

ஜெயக்குமார் முத்துவும் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டது மட்டுமில்லாமல் அவர் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறார்? எதற்காக இப்படி அமர வேண்டும் என்று இருவருக்கும் கேட்கத் தோன்றியது.

முத்து அவர் அருகில் சென்றான். அவர் கையில் பத்து ரூபாயைத் திணித்துவிட்டு

ஐயா எதுக்காக இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? என்று கேட்டபோது

எனக்கு கால் இல்ல . அதான் ஒக்காந்து இருக்கேன் என்றார். அவர் அருகில் இருந்த கட்டைக் காலை உற்றுப் பார்த்தான் முத்து.

உண்மையில் அவர் கால் இல்லாமல் தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஜெயக்குமார் அவர் அருகே அமர்ந்தான்.

தினந்தோறும் இந்த பார்க்குக்கு வருவீங்களா? என்று ஜெயக்குமார் கேட்டான்.

ஆமா தம்பி தினந்தோறும் இங்க வருவேன். உட்காருவேன். யாசகம் கேட்பேன் என்றார் காலை இழந்தவர்.

உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று முத்து கேட்டபோது

என் பேரு மாசிலாமணி. ஊரு திண்டிவனம் பக்கத்தில் ஒரு கிராமம் .10 ,15 வருஷத்துக்கு முன்னாடி இந்த சென்னைக்கு வந்தேன். ஒரு விபத்துல என்னோட காலை இழந்துட்டேன். .மனைவி பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க. அவங்க அவங்க வேலையை பாக்குறாங்க. என்னய யாரும் கவனிக்கல . ஒண்டிக்கட்டை ஆயிட்டேன். இரண்டு கால் இருக்கிற மனுசங்களையே யாரும் பார்க்கிறதில்ல. ஒத்தக்கால் இருக்கிற என்னய யாரும் பாப்பாங்களா? அதனால யாருக்கும் பாரம் இல்லாம நான் ஒதுங்கிட்டேன் தம்பி என்று மாசிலாமணி சொல்லும் போதே அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

இப்ப தனியாத்தான் இருக்கீங்களா? என்று ஜெயக்குமார் கேட்டான்.

அதற்கு பதில் சொல்லாமல் தலையை மட்டுமே ஆட்டினார் மாசிலாமணி.

காலை மாலை இரண்டு வேளையும் இங்க வந்து உட்காரிங்களா? இங்க எவ்வளவு வருமானம் வருது என்று முத்து கேட்டபோது

எங்க தம்பி யாரும் கொடுக்கிறது இல்லை . ஏதோ ஒரு சில ஈரம் உள்ள மனுஷங்க தான் ஒன்னு ரெண்டு கொடுத்துட்டு போவாங்க. ஏதோ இதுல வர்ற யாசகத்தை வச்சுத்தான் என்னோட வயித்த கழுவுறேன் என்றார் மாசிலாமணி

ஐயா யாசகம் கேக்குறது தப்பு இல்ல. ஆனா ஒரே இடத்தில் உட்கார்ந்து யாசகம் கேட்கிறது தான் தப்பு. இந்த பூங்காவுக்கு புதுசு புதுசா யாரும் வரப் போறதில்ல. இந்தப் பூங்காவ சுத்தி இருக்கிற ஆளுங்க தான் தினமும் வருவாங்க. ஒரு நாள் மட்டும் தான் உங்களுக்கு யாசகம் கொடுப்பாங்க. அடுத்தடுத்த நாள் கண்டிப்பா குடுக்க மாட்டாங்க ஏன்னா தினந்தோறும் நீங்க உட்காருறதுனால அவங்களுக்கு பணம் கொடுக்கிறதில ஒரு சலிப்பு ஏற்படும். அதனால நீங்க வேற இடத்துக்கு நடந்து போய் யாசகம் கேட்கவும் முடியாது. உங்களால ரொம்ப தூரம் நடக்கவும் முடியாது. அதனால நீங்க ஏன் இனிமேல் யாசகம் கேட்கணும்? என்று முத்து சொன்னபோது

எனக்கு வேற வழியில்ல தம்பி நான் என்ன பண்றது ? என்று சோகமாகச் சொன்னார் மாசிலாமணி .

அப்படி இல்ல .நாலு மனுசங்களப் போல நீங்களும் சுயமரியாதையோட நிமிர்ந்து இங்க நிக்க முடியும். யாருகிட்டயும் நீங்க யாசகம் கேட்கணும் அப்படிங்கற அவசியம் இல்ல என்றான் முத்து

அப்படிப் சொல்லிவிட்டுச் சென்றவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார் மாசிலாமணி

மறுநாள் மாலை அதே இடத்தில் மாசிலாமணி தன் கட்டைக் காலை தனியாகக் கழட்டி வைத்துவிட்டு போகிறவர் அத்தனை பேரிடமும் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஐயா என்று முத்து குரல் கொடுத்தான்.

நமக்கு இவ்வளவு மரியாதை குடுத்து கூப்பிடறது யாரு? என்று திரும்பிப் பார்த்தார் மாசிலாமணி.

அங்கே பெரிய பை ஒன்றை வைத்துக்கொண்டு நின்றிருந்தான் முத்து .

கட்டைக் காலை எடுத்து மாசிலாமணியின் காலில்லாத காலில் பொருத்திய ஜெயக்குமார் அவரை கைத் தாங்கலாக பூங்காவின் வாசலுக்கு அழைத்து வந்தான்.

அதற்குள் தான் கொண்டு வந்திருந்த சிறுவர் விளையாட்டு பொருட்களை எல்லாம் அந்த பூங்காவின் முன்னால் பிளாஸ்டிக்கை விரித்து பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்தான் முத்து .

கைத் தாங்கலாக மாசிலாமணியைக் கூட்டி வந்த ஜெயக்குமார் அவரை அந்த பொருட்கள் முன்னால் அமர வைத்தான்.

ஒரு சின்னக் கல்லாப்பெட்டியை கொடுத்து

ஐயா இனிமே நீங்க யாருகிட்டயும் யாசகம் கேட்க கூடாது . இந்தாங்க இதுல 5000 ரூபாய்க்கான பொருள் இருக்குது.

இதத் தினந்தோறும் வித்துக்கங்க இதுல வர்ற லாபத்தை எடுத்து சாப்பிடுங்க . அடுத்தடுத்து பொருள்களை வாங்கி போடுங்க நிச்சயமா இது உங்களுக்கு ஒரு புது வாழ்க்கையை குடுக்கும் என்று பெரியவருக்கு வாழ்வதற்கான வழியை காட்டினான் முத்து.

அதுவரையில் அமைதியாக இருந்த மாசிலாமணி வாய்விட்டு அழுது விட்டார்

தம்பி ஒத்த ரூபாய் குடுக்கிறதுக்கே யோசிக்கிற இந்த உலகத்துல இவ்வளவு பெரிய விஷயத்தை எனக்கு பண்ணி இருக்கீங்க. நானும் இந்த பூமியில் வாழ முடியும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு ஏற்படுத்தி இருக்கீங்க. நான் உங்களை மனுசனா பாக்கல தம்பி என்னோட வழிகாட்டியா பாக்கிறேன். கண்டிப்பா யார் கிட்டயும் இனி யாசகம் கேட்க மாட்டேன் என்ற அந்தப் பெரியவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே

ஒரு சிறுவன் அங்கிருந்த ஒரு பொம்மையை பார்த்து விலை கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்தப் பொருட்களுக்கான விலையை ஏற்கனவே முத்து சொல்லி இருந்தான். மாசிலாமணி வியாபாரத்திற்கான விலையைப் பேசிக் கொண்டிருந்தார் .

நடக்கட்டும், நடக்கட்டும் என்று சைகை செய்துவிட்டு முத்துவும் ஜெயக்குமாரும் அந்த பூங்காவிற்குள் நுழைந்தார்கள்.

மாசிலாமணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்

கட்டைக்கால் தனியாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி மாசிலாமணி சிந்திக்கவே இல்லை .

தனக்கு ஊனம் என்ற ஒரு குறையோ அதை வைத்து யாசகம் கேட்க வேண்டும் என்ற இழிநிலையோ இனி நமக்கு இல்லை என்று நினைத்தார் மாசிலாமணி.

ஒரு கால் இல்லாமலே இந்த பூமியை சுற்றிவர முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *