திருச்சி, அக். 12–
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமான தரையிறக்கி 141 ப தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது.
186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக இந்த விமானம் ரன்வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன் பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5.45 மணி முதல் இரவு 8.10 மணி வரை 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. தகவலறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும், விமானிகள் மூலமே அப்பிரச்சினையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை.
இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து பதட்டமாக விசாரித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், சக்கரம் விமானத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், விமானத்தை தரையிறங்குவதில் சிக்கல் இருக்காது என்று விமானிகள் திட்டமிட்டனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், விமான பயணிகளிடம் தொழில்நுட்ப கோளாறு குறித்து அறிவிக்கப்பட்டது.
மேலும், விரைவில் திருச்சியில் விமானம் மீண்டும் தரையிறங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதே நேரத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளையும், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸார் உள்ளிட்டோர் செய்தனர். 10க்கும மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து இரவு, 8.10 மணி வரை விமானம் வானில் பறந்தபடி இருந்ததால், பயணிகளின் உறவினர்கள் திக்..திக் என்ற பீதியில் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் விமானம் இரவு 8.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 144 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள் குழுவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விமானி இக்ரம் ரிபத்லி, சக விமானிகள் மைத்ரி ஶ்ரீகிருஷ்ணா, லைஷ்ராம் சஞ்சிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சுஷி சிங் மற்றும் சாகேத் திலிப் வதனா ஆகியோர் கொண்ட குழுவினர், பயணிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளாகவே பேசி திட்டமிட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமிட்டபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த விமானிகள் குழுவினர், சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர்.
விமானம் தரையிறங்கியபோது திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளின் உறவினர்கள், விமான பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கரகோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள் குழுவுக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி
மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது: “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.
பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன்.
பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!” என அதில் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறால் கடந்த சில மணி நேரங்களாக திருச்சி விமான நிலையத்தைச் சுற்றிய வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது; பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்டு அனைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேர தாமதத்துக்கு பிறகு வேறொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் ஷார்ஜா புறப்பட்டனர். அதில் 108 பயணிகள் பயணித்தனர். 36 பயணிகள் அச்சம் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.