பெங்களூரு, ஏப். 4–
பெங்களூரில் இருந்து வாரணாசி புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து வாரணாசி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இன்று காலை 6.15 மணியளவில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தெலுங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் 137 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
137 பயணிகள் தப்பினர்
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் விமானத்தில் பயணம் செய்த 137 பயணிகளும் பத்திரமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
அண்மையில், துபாய் நோக்கிச் சென்ற பெட்எக்ஸ் (FedEx) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால், டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.