சிறுகதை

நடுநிலை தவறாமல் பேசு | துரை சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் – 26

ஓரம் சொல்லேல்

(விளக்கம்: எந்த வழக்கிலும் ஒருவருக்கு சாதகமாக பேசாமல் நடுநிலையுடன் பேச வேண்டும்.)

* * *

கோபியும் அவனது நண்பன் ராமுவும் கல்லூரி முடிந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு கிளம்பினர். கோபி வண்டியை ஓட்டினான்.

அவனுடன் நண்பர்கள் சிலரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு கிளம்பினர்.

சாலையில் வரும் மற்ற வாகனங்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நண்பர்கள் அனைவரும் சிரித்து பேசியபடியே வண்டியை ஓட்டி வந்தனர்.

கொஞ்ச தூரம் வர வர நண்பர்கள் ஒவ்வொருவராக பிரிந்து சென்றனர்.

கோபியும் ராமும் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் ரெட் சிக்னல் இருந்தது. மின்னல் வேகத்தில் வந்த கோபி அதை பொருட்படுத்தாமால் சாலையை கடக்க முயன்றான்.

அப்போது எதிர் திசையில் கார் ஓட்டி வந்த சுந்தர் இரண்டு சக்கர வாகனம் ஒன்று போக்குவரத்து விதியை மதிக்காமல் தன்னை நோக்கி விரைந்து வருவதை பார்த்தார்.

சட்டென்று தனது காரின் பிரேக்கை அழுத்தினார். காரின் வேகம் குறைந்ததே தவிர கார் நிற்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் கார் கோபியின் இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால் கோபியின் இரண்டு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக கோபிக்கும் ராமுவுக்கும் பெரிய காயம் எதுவும் இல்லாமல் கை, கால்களில் மட்டும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தன. இரண்டு சக்கர வாகனமும் பலத்த சேதமடைந்தது.

இதை பார்த்த பக்கத்தில் இருந்தவர்கள் வேகவேகமாக சென்று கோபி மற்றும் ராமுவை மீட்டனர்.

லேசான காயமடைந்தாலும், விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து தெளிய வைத்தனர்.

கோபியின் வண்டியின் மீது மோதிய சுந்தர் காரை ஓரமாக நிறுத்தி, கோபிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக கூறி அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான உதவிகளை செய்து கொண்டு இருந்தான்.

கொஞ்சம் தெளிவானதும் ராமு தனது செல்போனை எடுத்து கோபியின் அண்ணனுக்கு போன் செய்தான்.

அண்ணே உங்க தம்பி கோபி மார்க்கெட் சிக்னல் அருகில் கார் மோதி அடிப்பட்டு கிடக்கிறான் சீக்கிரம் கிளம்பி வாங்க என்று கூறினான்.

தனது தம்பி அடிப்பட்டு கிடக்கும் செய்தி கிடைத்தும் பதறிப்போன கோபியின் அண்ணன் மாரிமுத்து தனது நண்பர்கள் நான்கு ஐந்து பேரை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு விரைந்தான்.

விபத்து எப்படி நடந்தது என்பதை விசாரிக்காமலே அவர்கள் காரை ஓட்டி வந்த சுந்தரை திட்டத் தொடங்கினர்.

அந்த பகுதியில் இருந்தவர்களும் விபத்துக்கு யார் காரணம் என்பது தெரியாமலே காயமடைந்து கிடந்த கோபி மற்றும் ராமுவுக்கு ஆதரவாக, கார் ஓட்டி வந்த சுந்தரை வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.

‘‘காரில் வந்தா கண்ணு தெரியாதா’’… ‘‘ரோட்டை பார்த்து வண்டி ஓட்டமாட்டேயா’’… ‘‘உங்களை மாதிரி ஆளுக்கெள்ளாலம் காரில் வந்தா ஏதோ ஏரோ பிளோன் ஓட்டிட்டு வந்தமாதிரி பறந்து வருவீங்க’’… ‘‘பாவம் சின்னப்பசங்க இப்படி அடிச்சு போட்டுடேயே’’…

என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசத் தொடங்கினர்.

சிலர் சுந்தரை அடிக்கவும் முற்பட்டனர்.

சுந்தருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

தன் மீது எந்த தவறும் இல்லை என்று எவ்வளவோ கூறினார். ஆனால் அந்த கூட்டத்தில் உள்ள எவரும் அவரது வார்த்தையை கேட்கவில்லை. அவருக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.

இதை பார்த்துக் கொண்டிருந்த கோபியும் ராமுவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டனர்.

அப்போது அந்த வழியாக போலீஸ் ரோந்து வாகனத்தில் வந்த சப்–இன்ஸ்பெக்டர், காரும் மோட்டார் சைக்கிலும் மோதி கிடப்பதை பார்த்து யார் காரை ஓட்டி வந்தது என்று கேட்க,

சுந்தர் வேகமாக சார் நான் தான் காரை ஓட்டி வந்தேன் என்மேல் எந்த தவறு எதுவும் இல்லை என்று கூறினார்.

கோபியின் அண்ணன் மாரிமுத்து, சப்–இன்ஸ்பெக்டரை அழைத்து, தனது தம்பி மீது எந்த தவறும் இல்லை என்றும் கார் ஓட்டுநர் வேகமாக வந்து என் தம்பியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டார்.

அவர் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையில் வழக்கு தொடருவேன் என்று கூறினார். அவரது நண்பர்களும் சேர்ந்து கொண்டு பேச தொடங்கினர்.

நான்கு ஐந்து பேர் ஒன்று சேர்ந்து பேசத் தொடங்கியதும் கோபியின் மீது எந்த தவறும் இருக்காது என்று தனக்கு தானே முடிவு செய்து கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரை அழைத்து கார் சாவியையும் சுந்தரின் டிரைவிங் லைசென்சையும் கேட்டார்.

சுந்தர் தன் மீது எந்த தவறும் இல்லை என்று எவ்வளவோ கூறினார்.

ஆனால் அவற்றை எல்லாம் காதில் வாங்காத சப்–இன்ஸ்பெக்டர் கோபிக்கு ஆதரவாகவே பேசினர்.

மேலும் கோபிக்கும், ராமுவுக்கும் காயம் ஏற்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததால் பெரிய தொகை ஒன்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இல்லையில் வழக்கு தாக்கல் தொடர்ந்து உங்களை கைது செய்வேன் என்று மிரட்டத் தொடங்கினார்.

சுந்தருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் தான் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வேகமாக வந்தனர் என்றும் தன் மீது எந்த தவறும் இல்லை என்று கத்தினார் கதறினார்.

ஆனால் யாரும் கேட்கவில்லை.

அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த டீ கடையில் நின்று கொண்டிருந்த 3 பேர் வேகமாக வந்தனர்.

அவர்கள் சப்–இன்ஸ்பெக்டரிடம் என்ன விஷயம் என்று கேட்டனர்.

இதை கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்து போங்க என்று சப்–இன்ஸ்பெக்டர் கூறினார்.

இதனால் கோபமடைந்த அவர்கள் 3 பேரும் நாங்கள் வக்கீல்கள் என்றும், இந்த விபத்தை நாங்கள் நேரில் பார்த்தோம்.

இந்த இளைஞர்கள் 2 பேரும் ரெட் சிக்னல் இருப்பதை பொருட்படுத்தாமல் சாலை விதிகளை மீறி வேகமாக வண்டி ஓட்டி வந்தார்கள்.

அப்போது எதிர் திசையில் வந்த கார் அவர்கள் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டும் பயனில்லாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

கார் ஓட்டி வந்த அவருக்கு சிக்னல் சரியாக இருந்தது. அதனால் அவர் மீது எந்த தவறும் இல்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்கள் மீது தான் தவறு.

சப்–இன்ஸ்பெக்டர் விபத்து, எப்படி நடந்தது? விபத்துக்கு யார் காரணம் என்று இரண்டு தரப்பினரிடமும் விசாரித்து நடுநிலையுடன் விசாரிக்க வேண்டும்.

ஒருவர் கூறியதை மட்டும் கேட்டுக் கொண்டு அவருக்கு சாதகமாக பேசக்கூடாது. இரண்டு தரப்பினரிடம் விசாரித்து அதன்பின் நடுநிலையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீங்களே அந்த இளைஞர்களிடம் விசாரியுங்கள் என்று வக்கீல்கள் 3 பேரும் சேர்ந்து குரல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சப்–இன்ஸ்கெபக்டர் கோபியையும் ராமுவையும் அழைத்து என்ன நடந்தது உண்மையை சொல்லுங்கள் என்று மிகவும் கோபத்துடன் கேட்டார்.

இதில் பயந்து போன் அந்த இளைஞர்கள், ‘‘சார் எங்க மீது தான் தவறு… நாங்க தான் சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்து விட்டோம்’’ என்று கூறினர்.

அவர்களை கண்டித்த சப்–இன்ஸ்பெக்டர், கோபியின் அண்ணன் மாரிமுத்துவை அழைத்து எச்சரித்தார்.

எந்த தவறும் செய்யாத சுந்தரை தண்டிக்க முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் தன் தவறை உணர்ந்து அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.

அவரை அங்கிருந்து கிளம்பி செல்லும்படி கூறினார்.

நடந்த உண்மையை எடுத்துக் கூறி தனக்கு ஆதரவாக பேசிய வக்கீல்கள் 3 பேருக்கும் நன்றி கூறினார் சுந்தர்.

மேலும் காயமடைந்த கோபியிக்கும் ராமுவுக்கு தலா ஆயிரம் ரூபாயை கொடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்று சென்றார் சுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *