செய்திகள்

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை அறுத்து விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

ராமேசுவரம், செப். 21–

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளில் இருந்த மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்தனர். இதனால் நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.