செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள்: பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவி மூலம் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி, அக்.7-

படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை பேரிடர் தகவல் தெரிவிக்கும்

கருவி மூலம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் துரித மீட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து ‘அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வென்னிலா’ என்ற விசைப்படகு புறப்பட்டு, மாலத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்த படகில் 9 மீனவர்கள் இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து 120 கடல் மைல் சென்றபோது படகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு கடலுக்குள் மூழ்குவதாக பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவி மூலம் சென்னையில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து மீட்பு சேவைகளுக்காக தேசிய அளவிலான தேடுதல் வேட்டையை இந்திய கடலோர பாதுகாப்பு படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தொடங்கியது. பேரிடரில் தவிக்கும் படகின் அருகாமையில் உள்ள நார்வே நாட்டை சேர்ந்த ‘எஸ்.கே.எஸ்.மோசெல்’, சிப்ரஸ் நாட்டை சேர்ந்த ‘சால்ஸ்பர்க்’ ஆகிய சரக்கு கப்பல்கள் மீட்பு பணிக்காக திருப்பி விடப்பட்டன. இதையடுத்து 2 சரக்கு கப்பல்களும், பேரிடரில் தவித்த 9 மீனவர்களையும் மீட்பதற்காக விரைந்து சென்றன.

சால்ஸ்பர்க் சரக்கு கப்பல் விரைந்து சென்று, நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது. இதையடுத்து விசைப்படகு மற்றும் அதில் இருந்த 9 மீனவர்களும் மாலத்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இஸ்ரோ தயாரிப்பு

பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவி, இந்திய கடலோர பாதுகாப்பு படை, தேசிய தேடுதல் மற்றும் மீட்பு ஆணையம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து சர்வதேச வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தயாரித்தது ஆகும்.

பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவிகள் இந்திய மீன்பிடி படகுகள், விசைப்படகுகள், சரக்கு கப்பல்கள், பிற சிறிய அளவிலான படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன. பேரிடர் தகவல் தெரிவிக்கும் கருவிகள் மூலம் ஏதாவது தகவல் வருகிறதா? என்று சென்னையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *