சிறுகதை

நடிப்பில் உச்சம் தொட்டது யார்? – ஆர். வசந்தா

குமரன் படித்து முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தான். அவனுக்கு அம்மா மட்டுமே. தன் சொந்த ஊரில் இருந்தாள். அவள் பெயர் கோமதி அம்மாள்.

திடீரென யுத்தம் ஏற்பட்டது அண்டை நாட்டுடன். குமரனும் அந்த ஸ்பாட்டுக்கு போக வேண்டியது இருந்தது. பல நவீன ரக குண்டுகள் வீசப்பட்டன. அவன் அருகில் குண்டு மழை பொழிந்தது. எதிர்பாரா விதமாக அவன் உடம்பிலும் சில குண்டுகள் உராய்ந்து சென்றன. பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குமரனை ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். முகத்தில் ஏற்பட்ட காயங்களை பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை மூலம் சரிப்படுத்தி விட்டனர்.

6 மாதத்திற்கு பின் திரும்பவும் தனது முகாமிற்கு வந்தான். குமரன் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். அவன் நண்பன் தடுத்தும் கேட்கவில்லை. தன் முகத்தைப் பார்த்ததும் தன்னை அவனுக்கே அடையாளம் தெரியவில்லை. திகைத்து விட்டான். அந்தக் கோர முகம் கண்டு, அவன் சுருளான முடி கருகி விட்டன. முகமும் பல தையல்களுடனும் வடுக்களுடனும் உருக்குலைந்து காணப்பட்டது. கைகளும் கருகி கிடந்தன. இந்த நிலையிலும் தன் அம்மாவை பார்த்து விட வேண்டும் என நினைத்தான். தன் மாமன் மகளைக் காண வேண்டும் என்று நினைத்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ளவும் நினைத்திருந்தான். இனி அந்த பெண்ணை மறந்து விட முடிவு செய்தான்.

சில நாட்கள் கழித்து தன் சொந்த ஊரான பெருநாழியை அடைந்தான். தன்னைத் தன் அம்மாவுக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று தன் மனதில் ஒரு திட்டம் போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான். திறந்தது அவன் அம்மாவே அவளுக்கும் அடையாளம் காண முடியவில்லை.

அப்போது குமரன் சொன்னான்: நான் உங்கள் மகனின் நண்பன் அருண். எனக்கு லீவு கிடைத்தது. எங்கள் ஊருக்கு போய் விட்டு வந்து விட்டேன். உங்களுடன் சில நாட்கள் கழிக்கச் சொல்லி குமரன் சொல்லி அனுப்பினான் என்றான் குமரன்.

கோமதி அம்மாள் மிகவும் சந்தோஷம் அருண். இங்கே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கு என்றாள். அருணும் சம்மதித்தான்.

கோமதி அம்மாளும் நல்ல முறையில் கவனித்து வந்தாள். அருணும் குமரன் என்று நினைக்க முடியாதபடி நடந்து கொண்டான்.

இடையில் மாமன் மகள் மஞ்சுளாவும் வந்து போனாள். அருணை பார்த்ததும் வெடுக்கென தலையை திருப்பிக் கொண்டாள். ஒரு நாள் அறுவறுப்பான முகத்தை வைத்துக் கொண்டு அவனை அறுவறுப்பாகப் பார்த்தாள். இது நியாயமானது தானே என்று மனதில் நினைத்துக் கொண்டான் குமரன்.

அவளது செயல்களைக் கண்டு அவளை மறக்க முடிவு செய்தான் குமரன். அவன் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்தது. கோமதி அம்மாளும் பச்சைப் பருப்பு பாயசம் செய்து அருணுக்கு கொடுத்தாள். அவனை வழி அனுப்பினாள்.

3 மாதம் கழித்து அவனுக்கு ஒரு தபால் வந்தது. அருண் என்ற பெயரில் கோமதி அம்மாள் தான்எழுதியிருந்தாள். சில திருமண தேதிகளில் எழுதி எது குமரனுக்கு ஒத்துப்போகும் என்று கேட்டிருந்தாள். பதிலுக்கு ஒரு தேதியை குறிப்பிட்டு பதில் போட்டான் அருணும். மணப்பெண் யார் என்பது மர்மமாகவே இருந்தது. திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாக வரும்படி எழுதி இருந்தாள். குமாரனுடன் அருண் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் எழுதியிருந்தாள்.

குமரன் புறப்பட்டு வந்தான் பெருநாழிக்கு. ஊரெங்கும் பேனர்களும் போஸ்டர்களும் அமளிபட்டன. ” திருமண அழைப்பிதழ் ” மணமகன் ராணுவ வீரன் குமரன் & மணமகள் ஆசிரியை மஞ்சுளா ” என்று இருந்தது.

வியப்பு ஏற்பட்டது குமரனுக்கு. தனக்கும் கல்யாணமா என்று! வீட்டை அடைந்ததும் அம்மா என்று அழைத்தான். கோமதி அம்மாள் என்னப்பா குமரன் எங்கே என்றாள்? பின்னால் வருவான் என்றான். இருவருக்கும் சிரிப்பு வந்தது.

குமரன்: என்ன தான் நன்றாக நடித்தாலும் தாயின் நடிப்புக்கு முன் நான் ஒன்றுமே இல்லை! அன்று மட்டும் நம் பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செங்காயாக கொய்யாப்பழம் பறித்து தராவிட்டால் தாய் நடிப்பு எனக்கு புரிந்திருக்காது. மேலும் ஊருக்குத் திரும்பும் போது வழக்கமாக செய்து தரும் கைமணம் மிகுந்த பாசிப்பருப்பு பாயாசம் அன்பை வெளிப்படுத்தி விட்டதே.

கோமதி அம்மாள்: நீ நடிக்கிறாய் என்பதை உன் முகம் தெரிவிக்கா விட்டால், எவ்வளவு தான் குரலை மாற்றிப் பேசினாலும் நானும் ஒரு தடவை கீழே விழுந்த போது “அம்மா” என்று உன் சொந்த குரலில் கத்தி விட்டாயே!

ஒரு தடவை தபால்காரர் குரியரை தந்து கையெழுத்து கேட்டவுடன் முதலில் குமரன் என்று எழுதி விட்டு பின் அருண் என்று திருத்தினாயே இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.

மஞ்சுளா: அத்தான் நீங்கள் நான் அலட்சியப்படுத்துவதாக தானே நினைத்தீர்கள். ஒரு தடவையாவது என்னை மஞ்சுளா என்று அன்புடன் அழைப்பீர்கள் என்று ஆசையுடன் எதிர்பார்த்தேன். ஏமாற்றமே கண்டேன். என்றோ உங்களுக்கு எம்ப்ராய்டரி போட்டு கொடுத்த கைக்குட்டையை பத்திரமாக உங்கள் கைப்பெட்டியியில் வைத்திருப்பதை பார்த்து மனமகிந்தேன். மாமன் மகளே உங்களை நிராகரித்தால் வேறு யார் உங்களை மணமுடிக்க இசைவார்? உங்களுடன் நானும் நடிப்பில் போட்டியிட்டேன். அத்தைக்கு உதவுவது போல் வந்து உங்கள் நலம் விசாரிப்பேன். உங்களின் அக அழகைப் பார்த்தேனே தவிர புற அழகை அல்ல. நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட நீங்கள் இந்த ஊர் பெருமைப் பட நடந்திருக்கிறீர்கள். நீங்கள் அல்லவோ என் அன்பு கணவர் என்றாள்.

குமரன் அவள் அன்பில் திக்குமுக்காடிப்போனான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *