சென்னை, ஆக. 28–
நடிகை ரேகா நாயர் சென்ற கார் மோதி ஒருவர் பலியானார்.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரேகா நாயர், 2022-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் மேலாடை இல்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தைரியமாக கூறி வந்தார்.
இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சன் (வயது 55). இவர் நேற்று இரவு ஜாபர்கான்பேட்டை சாலையில் மதுபோதையில் படுத்துக்கிடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் படுத்திருந்த மஞ்சன் மீது ஏறி இறங்கியுள்ளது. கார் ஏறிய வேதனையில் மஞ்சன் அலறியுள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டும் கூட கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. சத்தத்தைக் கேட்டு வேகமாக வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மஞ்சனை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஞ்சன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, மஞ்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய கிண்டி போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சியில் விபத்தில் உயிரிழந்த மஞ்சனை ஏற்றிச் சென்ற காரின் பதிவெண் கிடைத்த நிலையில், அதனை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கார் நடிகை ரேகா நாயருக்க சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நடிகை ரேகா நாயரின் ஓட்டுநர் என்றும், அவர் ஓட்டிய கார் ரேகா நாயரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டபோது காரில் ரேகா நாயர் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.