சிறுகதை

நடிகை படம் போட்ட காலண்டர்! |சின்னஞ்சிறுகோபு

மதிய நேரம். வீட்டின் வெளி வராண்டாவில் ஈஸிசேரில் சாய்ந்தபடி அந்தகால நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தேன். பின்னே, இந்த 66 வயதில் அவளோடு ஓடியாடி டூயட்டா பாடமுடியும்?!

அப்போது நாலைந்து இளைஞர்கள் வாசலுக்கு வந்து, “சார், இந்தாங்க இந்த வருட காலண்டர்” என்று ஒரு முருகன் படம் போட்ட தினசரி காலண்டரைக் கொடுத்தார்கள். அவர்கள் இந்த ஊரின் ஆன்மிக நல சங்கக்காரர்கள்.

நான் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “என்ன தம்பிகளா, நயன்தாரா மாதிரி நல்ல நடிகைகள் படம் போட்ட காலண்டர் ஏதுமில்லையா?” என்றேன்.

அந்த இளைஞர்கள் கொஞ்சம் திகைத்துப் போக, அதில் ஒருவர் “தாத்தா….வரவர உங்க குசும்பு அதிகமாயிட்டுதான் போகுது! பாட்டியிடம் சொல்லி அடக்கி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்!” என்று சொல்ல மற்றவர்களும் என்னை ஒரு மாதிரியாக ஏற இறங்கப் பார்த்துவிட்டு சென்றார்கள்.

அந்த முருகன் படக்காலண்டரைப் பார்த்ததும் என் நினைவுகள் எனது சிறுவயது காலத்துக்கு – முருகன் மயில்மேல் பறந்து – செல்வதைப்போல பறந்து சென்றது!

அது 55 வருடங்களுக்கு முன் நான் 11 வயது சிறுவனாக 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்!

1965-ம் வருடம் முடிந்து 1966-ம் வருடம் பிறந்திருந்தது.

என்னுடைய அப்பா அன்று ஒரு தினசரி காலண்டர் வாங்கி வந்தார். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த காலண்டரின் அட்டையிலும் இதைபோல ஒரு முருகன் ஆசீர்வதிப்பதை போல ஒரு படம்தான் இருந்தது!

இந்த காலத்தில் பலவித சங்கங்கள், நிதி நிறுவனங்கள், மளிகை, ஜவுளிக் கடைகள், பத்திரிகைகள் போன்றவை போட்டிப் போட்டுக்கொண்டு தினசரி, மாதக் காலண்டர்களை இலவசமாக கொடுப்பதுபோல அறுபது வருடங்களுக்கு முன்பெல்லாம் யாரும் அவ்வளவாக கொடுப்பதில்லை.

அப்போதெல்லாம் காலண்டரும் விலைக்கு வாங்கும் ஒரு பொருள்தான். அதுவும் தினசரி காலண்டர்களை யாரும் விளம்பரத்துக்காக கூட இனாமாக தருவதில்லை.

அந்த 1966-ம் வருட காலண்டரைப் பார்த்ததும் என் மனதில் ஒரு ஜோக் தோன்றியது. அப்போது எங்கள் பஞ்சாயத்து போர்டு நூலகத்தில் கல்கி, விகடன், சுதேசமித்திரன், நவசக்தி, கலைமகள் போன்ற பத்திரிகைகளுடன் கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையும் வந்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் நான் பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்திருந்தேன். அந்த கண்ணன் பத்திரிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி அனுப்பி, அது 1-12-65 இதழில் என் பெயர் எனது ஊர் பெயருடன் வெளிவந்திருந்தது. அதிலிருந்து எனக்கு நானும் ஒரு எழுத்தாளனாகி விட்டதாகவே மனதில் ஒரு பெருமிதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

உடனே ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, அடுத்த தெருவிலிருந்த போஸ்ட் ஆபீஸ்க்கு சென்றேன். சட்டைப்பையில் மூன்று காசுகள் இரண்டு, அதாவது ஆறுகாசுகள் இருந்தது. போஸ்ட் கார்டும் ஆறு காசுகள்தான்!

ஒரு கார்டை வாங்கி, அந்த போஸ்டாபீஸ் பெஞ்சிலேயே உட்கார்ந்து, அந்த பத்திரிகை முகவரி, எனது முகவரியையெல்லாம் எழுதிவிட்டு ஜோக்கை இப்படி எழுதினேன்.

ஆசிரியர்: காலண்டருக்கு ஏன் காலண்டர் என்ற பெயர் வந்தது?

மாணவன்: அதன் காலம் முடிந்ததும் ‘டர்…டர்..’ ரென்று கிழிப்பதால் சார்!

அதன்பிறகு கார்டை தபால் பெட்டியில் போட்டுவிட்டு, தபால் பெட்டியை லேசாக ஆட்டிப் பார்த்து விட்டு, திருப்தியுடன் வீட்டுக்கு திரும்பினேன்!

அப்படி வீட்டுக்கு திரும்பி வரும்போது என் மனதில், ‘ இந்த வருடம் தீபாவளி எப்போது வருகிறது? ஐம்பசி ஆரம்பத்திலேயா, இல்லை ஐப்பசி கடைசிலேயா? பள்ளிக்கூட லீவு நாளான சனி, ஞாயிறில் வராமல் இருக்குமா?’ என்றெல்லாம் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இப்போது போலில்லை! அறுபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளியில்தான் முறுக்கு, பகோடா, அல்வா, மைசூர்பாகு, லட்டு என்று விதம் விதமாக பலகார பட்சணங்கள் கிடைக்கும். அதோடு புதிய சட்டைகள், கம்பி மத்தாப்புகள், தரை சக்கரங்கள், புஸ்வாணங்கள், வெடிகள் என்று விதம் விதமான பட்டாசுகள் வேறு! அதனால் அந்த காலத்திலெல்லாம் தீபாவளி என்பது சிறுவர்களின் ஒரு கனவு பண்டிகையாகவே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் முருகன் படம் போட்ட அந்த புதிய காலண்டரை, ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி, ஆணியிலிருந்து ஆர்வத்துடன் கழற்றினேன்.

காலண்டரை கீழே வைத்து, ஒரு புத்தகம் போல இருந்த தேதி காகிதங்களை அழுத்தி புரட்ட ஆரம்பித்தேன். மார்கழி மாதத்திலிருந்து ஆடி, ஆவணி மாதத்தை தாண்டிப் பார்ப்பதற்குள்ளேயே, காலண்டரின் தாள்கள் அந்த சிறு துணி ஒட்டலிருந்து பிய்ந்து தனித்தனியாக வர ஆரம்பித்தது. ஒட்டப்பட்ட பசை சரியில்லை போலிருக்கு! நான் நன்றாக அந்த காலண்டரின் தாள்களை அழுத்திப்பிடித்துக்கொண்டு புரட்டியபடி, ஐப்பசி மாதத்தின் பகுதிக்கு சென்றபோது, ஐப்பசி 26 வெள்ளிக்கிழமை நவம்பர் 11-ந்தேதி தீபாவளி என்று தெரிந்தது!

தீபாவளி ஐப்பசி மாதக்கடைசியில்தான் வருகிறது. ஆனாலும் வெள்ளிக்கிழமையில் வருகிறது என்று கொஞ்சம் ஆறுதலாக நிமிர்ந்தபோதுதான் நடந்த விபரீதம் எனக்கு தெளிவாக புரிந்தது. அந்த காலண்டரின் தேதி அச்சிட்ட அந்த காகிதகேக், அந்த காலண்டரின் ஆணியிலிருந்து வெளியே வந்ததுடன், அதன் தாள்களும் தனித்தனியாக உதிரியாக வெளிவந்திருந்தது!

‘ஐயோ, இதை எப்படி ஒட்டுவது, என்ன செய்வது?’ என்று நான் திகைத்தபோதுதான், அப்போது ஜன்னல் வழியாக வந்த ஒரு வேகமான காற்று, அந்த காலண்டரின் தாள்களை வீடெங்கும் ஒரு காகித மழையைபோல பறக்கவிட்டு விட்டு சென்றது.

‘ஐயயோ… அப்பா வந்தால் அடிப்பாரே’ என்று நான் நினைத்த அதே நேரத்தில், எங்கேயோ சென்றிருந்த எங்கப்பாவும் வந்து சேர்ந்தார். என் விதி, இதெல்லாம் மட்டும் நான் நினைத்தபடி உடனே நடக்கும்!

அவர் வந்த வேகத்தில் கோபத்துடன், ” ஏண்டா இப்படி புது காலண்டரை தாள் தாளாக கிழிச்சு பறக்க விட்டே?’ என்று கேட்டபடி, என் முதுகில் இரண்டு அடி கொடுத்தார்!

அப்போது சத்தம் கேட்டு ஓடோடி வந்த என் தங்கை, ” என்ன அண்ணா, 365 தாள்களும் சரியாக இருக்காயென்று கிழித்து எண்ணிப் பார்த்தாயா?” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் கேட்டாள்!

அதன்பிறகு கோபத்துடன் ஒரு ஒருரூபாய் காசை என் மூஞ்சிலேயே விட்டெறிந்து, “போடா போ! தேர் முட்டிக்கிட்டேஇருக்கும் ரெங்கநாதன் கடைக்குப் போய் புதிததாக ஒரு காலண்டரை வாங்கிட்டு வந்து, தொலை!” என்று என்னை விரட்டினார்!

நான் அந்த ரெங்கநாதன் கடைக்கு சென்று பார்த்தபோது, அங்கே கடை முழுவதும் நாலா பக்கமும் காலண்டர்களாக தொங்கிக் கொண்டிருந்தது. லெட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன், காந்திஜி, நேருஜி அவ்வளவு ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் காலமான அமெரிக்க ஜனாதிபதி கென்னடி படம் போட்ட காலண்டர் உட்பட விதம் விதமான படங்களுடன் காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருந்தது!

ஆப்போது நடிகை சாவித்திரி படம் போட்ட காலண்டர் ஒன்று என் கண்ணில் பட்டது. நல்ல குறு குறு கண்களுடன், குண்டு கன்னங்களுடன் , வசீகரமான சிரிப்புடன் அந்த காலண்டர் என் மனதைக் கவர்ந்தது!

உடனே அந்த நடிகை படம் போட்ட காலண்டரை வாங்கிக் கொண்டு உற்சாகத்துடன் வீட்டுக்கு திரும்பினேன்!

காலண்டரை வாங்கிப்பார்த்த எங்க அப்பாவின் முகம் ஏனோ அஷ்ட கோணலாகியது.

மறுபடியும் என் முதுகில் ஒரு அடி கொடுத்து, “போய், உருப்படுற வழியை பார்! புத்தகத்தை எடுத்து படி!” என்றார்.

‘அதான் புது காலண்டர் வாங்கிட்டு வந்தாச்சே, மறுபடியும் எதுக்கு அடிக்கணும்?’ என்று எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை!

எங்க அப்பா, உடனே ரூமுக்கு சென்று ஒரு சுத்தியலையும் குறடையும் எடுத்து வந்தார். அந்த நடிகைபடம் போட்ட காலண்டர் அட்டையிலிருந்து, அந்த தேதியின் காகித கேக்கை அப்படியே பெயர்த்து எடுத்து, ஏற்கனவே இருந்த முருகன் படக்காலண்டரின் அட்டையில் ஆணியடித்து பொருத்தினார். பிறகு அந்த நடிகை படம் போட்ட காலண்டரின் அட்டையை வீட்டின் ஒரு மூலையில் வீசினார். முருகன் படம்போட்ட காலண்டரை ஆணியில் மாட்டிவிட்டு, என்னை மறுபடியும் ஒரு முறைப்பு முறைத்தபடி சென்றார்.

அந்த நடிகைபடம் போட்ட காலண்டர் அட்டையில்தான் அந்த 1966-ம் வருட அரைப் பரீட்சை, முழுப் பரீட்சையெல்லாம் நான் எழுதினேன்!

அப்போது என் முன் ஏதோ நிழலாடுவது போல தோன்றியது.

நான் என் சிறுவயது நினைவிலிருந்து மீண்டு வந்து, யாரென்று பார்த்தேன்!

யாரோ இருவர் ஒரு பைக்கிலிருந்து காலண்டர்களுடன் இறங்கி, என்னருகே வந்து, “சார், நாங்க கடைத்தெருவில் புதிதாக ஜவுளிக்கடை திறந்திருக்கிறோம். நீங்க குடும்பத்துடன் வரவேண்டும்” என்று சொல்லியபடி ஒரு காலண்டரை கொடுத்து சென்றார்கள்.

அந்த காலண்டரில் நடிகை நயன்தாராவின் படம் போட்டிருந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *