செய்திகள்

நடிகை கவுரி கிஷன் விவகாரம்: யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ்

Makkal Kural Official

சென்னை, நவ. 7–

நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் யூ-டியூபர்களுக்கு குஷ்பு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் ‘பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே… வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது.

இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் ‘இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?’, என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அப்போது கவுரி கிஷன், இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை ‘டார்கெட்’ செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா… இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”, என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்! தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.

அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா? மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *