சிறுகதை

நடிகையின் மகள் – ஆவடி ரமேஷ்குமார்

ஹால் சோபாவில் அமர்ந்திருந்த தரகர் சாம்பசிவம் தான் கொண்டு வந்திருந்த பெண்களின் போட்டோக்களை எடுத்து டீபாயின் மேல் வைத்து விட்டு தன்னைச் சுற்றி நாற்காலிகளில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தையும் அவரின் மனைவி ஜெயமணியையும் அவர்களின் மகன் சியாம் சுந்தரையும் பார்த்தார்.

“சரி, ஒவ்வொரு போட்டோவா காண்பிங்க சாம்பசிவம். செலக்ட் பண்ணுவோம்” என்றார் சோமசுந்தரம்.

ஏழெட்டு போட்டோக்களைப் பார்த்து அவைகளை நிராகரித்தனர் மூவரும்.

அடுத்து ஒரு போட்டோவைக் காண்பித்தார். அந்தப் பெண் மிக அழகாக, மங்களகரமாக, மனசுக்குப் பிடித்தபடி இருக்கவே… “சரி இந்தப் பொண்ணோட டீடெயில்ஸ் சொல்லுங்க” என்றார் சோமசுந்தரம்.

அந்த போட்டோவை கையில் வாங்கி உற்றுப் பார்த்த ஜெயமணி, “இந்த பொண்ணோட ஜாடையைப் பார்த்தா சினிமால கவர்ச்சி நடனம் ஆடற ஒரு பழைய நடிகையோட மகள் மாதிரி தெரியுதே தரகர் அய்யா. சரிங்களா?” என்று கேட்டார்.

“சரி தான். நடிகை கோகிலாஸ்ரீயோட பொண்ணு தான் மேடம். டாக்டருக்கு படிச்சிருக்கா எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். உங்க மகனுக்கு ரொம்ப பொருத்தமான பொண்ணுங்கிறது என் அபிப்ராயம்”

“என்னது, கோகிலா ஸ்ரீயோட மகளா? நோ..நோ… இந்த பொண்ணு வேண்டாம். எடுத்து உள்ள வைங்க. வேற காட்டுங்க” – சோமசுந்தரம்.

” ஆமாங்க. நடிகையோட அதுவும் கவர்ச்சி நடிகையோட மகள்…வேண்டவே வேண்டாம்!” – ஜெயமணி.

“அப்படியா… ஆனா நான் இந்த பொண்ணோட நான் பழகியிருக்கேன். குணத்தில் தங்கம்! அவங்கம்மாவோட தொழிலை வச்சு பொண்ணை எடை போடாதீங்க. இந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் சென்னையிலே ஒரு பிரபலமான ஆர்க்கிடெக்ட்! நல்ல குடும்பங்க”

“வேற காட்டுங்க சாம்பசிவம்”

“அப்பா…கொஞ்சம் பொறுங்க. எனக்கு இந்தப் பொண்ணைப் ரொம்ப பிடிச்சிருக்கு. பேர் என்ன அங்கிள்?”

“வசுந்திரா தேவி. மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறாங்க”

“அப்பா…அம்மா…எனக்கு வசுந்திராவையே முடிச்சிடுங்களேன்”

சோமசுந்தரமும் ஜெயமணியும் சியாமின் முடிவைக் கேட்டு அதிருப்தியடைந்தனர்.

“டேய்…இந்த பொண்ணு ஒரு நடிகையோட மகள்டா! நமக்கு இந்த சம்பந்தம் ஒத்து வராது. வேண்டாம்” -சோமசுந்தரம்.

“சோ, வாட்? அவங்கம்மா தன் திறமை மூலமா சினிமால வருமானத்துக்காக டான்ஸ் ஆடி நடிச்சிருக்கலாம். ஆனா தன் மகளை ஒரு டாக்டராக்கியிருக்காங்களே. சினிமால தன் வாரிசைக் கொண்டு வரலையே… இத்தனைக்கும் வசுந்திரா கொள்ளை அழகு!எனக்கு அவங்கம்மாவையும் அவங்கப்பாவையும் நினைக்க பெருமையா இருக்கு. படத்துல வருமானத்துக்காக நடிச்சிருந்தாலும் பொது வாழ்க்கையில் நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறாங்க.

தான் பெற்ற பெண் பிள்ளையை டாக்டருக்கு படிக்க வச்சிருக்காங்கனு நினைக்கும் போது அவங்க ரொம்ப ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்கனு தானே அர்த்தம்? நானே ஒரு மனோதத்துவ டாக்டர். என்னை புரிஞ்சுக்குங்க. என்னால் மனிதர்களை எடைபோட முடியும். அப்பா … வசுந்திராவையே எனக்கு செலக்ட் பண்ணிடுங்க ப்ளீஸ்!”

சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து போய்விட்டான் சியாம்.

மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் திரு திருவென விழித்த சோமசுந்தரமும் ஜெயமணியும் மகன் ஒரு மனோதத்துவ டாக்டர் என்பதால் தரகரிடம் விவாதம் செய்யாமல் வசுந்திராவையே தங்களின் வருங்கால மருமகளாக ஆக்கிக் கொள்ள மனப்பூர்வமாக முடிவு செய்துவிட்டோம் என்று கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *