கோவை, ஆக. 9–
நடிகர் விஜய் சேதுபதியை உதைத்தால் ரூ.1001 பரிசு என அறிவித்த இந்துத்துவ தலைவரான அர்ஜூன் சம்பத்துக்கு நீதிமன்றம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், தனது டுவிட்டர் பக்கத்தில், “தேவர் ஐயாவை இழிவு படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும்” என்று பதிவிட்டு இருந்தார்.
ரூ.4 ஆயிரம் அபராதம்
இதையடுத்து அர்ஜுன் சம்பத்தின் பதிவு தொடர்பாக கடந்த 17.11.2021 அன்று ஆய்வாளர் சாந்தி கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 504, 506 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை 5 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு தண்டனை தொகையாக ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.