செய்திகள்

நடிகர் விஜய் கட்சியில் 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இணைந்தனர்

சென்னை, மார்ச்.10-–

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மளமளவென குவிந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலே இலக்கு என்று அறிவித்த விஜய், தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணியை சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலியை நடிகர் விஜய் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்ததுடன், முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில், தமிழக மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்யவிரும்பினால், எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள். சட்டமன்ற தேர்தலில் ‘சரித்திரம் படைப்போம்’ என்று பேசியிருந்தார்.

செயலி ஸ்தம்பித்தது

இந்த வீடியோ நேற்று அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதையடுத்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை செயலியில் மளமளவென உறுப்பினர்கள் சேர தொடங்கினர். ஒரே நேரத்தில் அனைவருமே இந்த செயலியை பயன்படுத்தியதால், சில நேரங்களில் இந்த செயலி ஸ்தம்பித்தும் போனது. அந்தளவு உறுப்பினர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

குறிப்பாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலமாக க்யூஆர் குறியீடு இணைப்புகளைப் பயன்படுத்தி உறுப்பினர் அடையாள அட்டையையும் ‘டவுன்லோடு’ செய்துகொண்டனர். அதனை ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து மகிழ்ந்தனர்.

சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு கட்சியில் இணைந்தனர்.

செயலி மட்டுமன்றி வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமும் உடனடியாக கட்சியில் இணைய க்யூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 94440 05555 என்ற வாட்சப் எண்ணிற்கு TVK என குறுஞ்செய்தி அனுப்பியும் கட்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 2 கோடியை எட்டுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *