சென்னை, செப். 3–
நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு கால அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார்.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது வடிவேலு ஒரு படத்தில் தன்னுடன் நடித்து யாராவது பிரபலமான நடிகர் ஆகிவிட்டார்கள் என்றால் அவர்களை அழித்துவிடுவார். அதைப்போல , தன்னைவிடச் சிறப்பாக நடிக்கிறார் எனப் பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் நம்பும் வகையில் பொய் சொல்லி அவர்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்திவிடுவார் எனவும் வடிவேலுவைப் பற்றிக் குற்றம்சாட்டி சிங்கமுத்து பேசினார்.
இந்த நிலையில், சிங்கமுத்து பேச்சை கவனித்த வடிவேலு உடனடியாக, சென்னை ஐகோரத்ட்டில் யூ டியூப் சேனல்களில் அவதூறாகப் பேசியதாகக்கூறி ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு, சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்தார்.
சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும் வடிவேலு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, விசாரணைக்கு வந்த அந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில், ரூ.5 கோடி கேட்டு வடிவேல் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு 2 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கமுத்து, தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்று இரண்டு வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.