செய்திகள்

நடிகர் ராஜேஷ் காலமானார் 

Makkal Kural Official

சென்னை: கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிகராக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கட்டிப்பிடித்த நடிகர் ராஜேஷ், இன்று (மே 29) காலை திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

1949ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷ், தனது வாழ்க்கையை ஆசிரியராக துவங்கி, பின்னர் திரைத்துறையில் புகழ்பெற்ற நடிகராக மாறினார். 1974ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர், அதன் பின்னர் திரையுலகில் முக்கியமான நடிகராக திகழ்ந்தார்.

வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்த ராஜேஷ், தாய்வீடு, சிறை, சத்யா, ஜெய்ஹிந்த், நேருக்கு நேர், தீனா, ரமணா, விருமாண்டி, தர்மதுரை, சர்க்கார் உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு, டப்பிங் கலைஞராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரையை மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் பல முக்கிய சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

சென்னையின் ராமாபுரம் பகுதியில் வசித்து வந்த அவர், இன்று காலை 8.15 மணியளவில் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அருகிலுள்ள மருத்துவமனையில் அவரை கொண்டு சென்றபோதும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மறைவை உறுதி செய்தனர்.

அவரின் திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *