செய்திகள்

நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

Makkal Kural Official

துணை முதல்வர் உதயநிதி, நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினர் இறுதி மரியாதை

சென்னை, மார்ச்.26-

பிரபல பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி சென்னையில் நேற்றிரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தனது மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதிராஜாவிற்கும், மனோஜ் குடும்பத்தாருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

நடிகரும் – தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள், படவுலகத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று மனோஜ் உடல் மீது மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

நடிகர் மனோஜ் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் மனோஜின் மரணம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

உடல் பக்கத்தில்

சோகமே உருவாய் பாரதிராஜா

மனோஜ் உடல் பக்கத்தில் சோகமே உருவாய் பாரதிராஜா உட்கார்ந்திருந்தார். அஞ்சலி செலுத்திய படவுலகத்தினர் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினார்கள். இசையமைப்பாளர் இளையராஜா வீடியோவில் அதிர்ச்சியை வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சூர்யா, கார்த்தி, மன்சூர் அலிகான், தம்பி ராமையா, சரத்குமார், செந்தில், நாசர், சத்யராஜ், தம்பி ராமையா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, ஹரி,லிங்குசாமி, பேரரசு, தயாரிப்பாளர் தாணு, கவிஞர்கள் வைரமுத்து, மதன்கார்க்கி, சினேகன் மற்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் ஆகியோர் நேரில் சென்று மனோஜ் உடல் மீது மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் மனோஜ் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

முதலமைச்சர் இரங்கல்

மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகரும், இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தாஜ்மஹால் படத்தில்

கதாநாயகன்

மனோஜ், சினிமாவில் டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ரஜினியின் ‘எந்திரன்’ படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார். 1999-ல் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பாரதிராஜவே இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

மேலும் பாரதிராஜா இயக்கிய ஈர நிலம் மற்றும் அல்லு அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், சாதுரியன், பேபி படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். சரத்குமார், முரளியுடன் இணைந்து சமுத்திரம் படத்திலும், பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்திலும் முரளியுடன் இணைந்தும் நடித்து இருந்தார்.

அன்னக்கொடி, வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் மனோஜ். பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்த ‘மார்கழி திங்கள்’ படத்தை மனோஜ் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார்.

சாதுரியன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்து கொண்டார் மனோஜ். இவர்களுக்கு அர்ஷிதா, மதிவதனி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்து இயக்க மனோஜ் திட்டமிட்டு இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *