சென்னை, பிப் 13–
‘‘பிரதீப் ரங்கநாதன் எனும் என்னுடைய நண்பனை இந்த திரைப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனை தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையை கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம்’’ என்று ‘டிராகன்’ படத்தின் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து கூறினார்.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து (‘ஓ மை கடவுளே’ இயக்கியவா) இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, 21ந் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு ‘டிராகன்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன்.
‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி – ஒளிப்பதிவு, லியோன் ஜேம்ஸ். இசை தலைமை நிர்வாகி அதிகாரி – ரங்கராஜ்.
கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”டிராகன்’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட என்று சொல்லலாம். பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாக பணியாற்றி இருக்கிறோம் என்றார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்’’ என்றார் இயக்குனர் அஸ்வத்.
நாங்கள் இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு … வேலை என்றால் வேலை..! இதில் எந்த குறுக்கீடும் இருக்காது என்று கூறினார்.
‘டிராகன் ‘ படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளில் இளமை குறும்பு – கல்லூரியில் சீனியர் மாணவர்களின் கலாட்டா, ரகளை, – நாயகனின் கெத்து. கௌதம் வாசுதேவ் மேனனின் நடனம்- மிஷ்கினின் நடிப்பு- அனுபமா பரமேஸ்வரனின் கவர்ச்சி – கயாடு லோஹரின் காதல் பேசும் கண்கள்- என ரசிக்கும் படியான காட்சிகள் ரசனையுடன் இடம் பிடித்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று அர்ச்சனா கல்பாத்தி உறுதிபடக் கூறினார்.