செய்திகள்

நடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

‘கொரோனா’ எதிரொலி: பெருத்த நஷ்டம்

நடிகர் – நடிகைகளின் சம்பளத்தை 50% ஆக குறைக்க தமிழ்ப்பட அதிபர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சென்னை, ஜூலை 8–

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், திரைப்பட இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் இன்று தொடங்கவுள்ளன.

சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொது முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படி சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50 சதவீதம் வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டது.

இந்தச் சம்பளக் குறைப்புப் பேச்சுவார்த்தை தொடர்பாக நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *