செய்திகள் போஸ்டர் செய்தி

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

Spread the love

*பிரபல தோல் சிகிச்சை மருத்துவர்

* லேசர் முறை பயிற்சியில் நிபுணர்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் அறிமுகமான

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

 

சென்னை, மார்ச் 27–

பிரபல தோல் மருத்துவ சிகிச்சை நிபுணரும், நடிகருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா, ’50/50’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார்.

இவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 37.

சேதுராமனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி உமையாள் என்ஜினீயர் ஆவார். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

சேதுராமன் நடிகராக மட்டுமன்றி, தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்பட்டவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை எடுத்து வந்தார்கள். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், குஷ்பு அதிர்ச்சி

நடிகர் சந்தானம் ட்விட்டரில், என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீ எங்கள் இதயங்களை நொறுக்கிவிட்டு சென்றிருக்கிறாய் சேது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக சென்றாய்? பிறரை காட்டிலும் நல்ல உள்ளங்கள் ஏன் வேகமாக இந்த பூமியைவிட்டு செல்கின்றன? உன்னுடைய அமைதியான குணத்தையும் உன் அழகான சிரிப்பையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன். நீ திரும்பி வர மாட்டாயா என்று நினைக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஐஷ்வர்யா ராஜேஷ்

“அவருடைய மரண செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறேன். சீக்கிரமாக சென்றுவிட்டார். மிகவும் நல்ல மனிதர்,” என்று நடிகை ஐஷ்வர்யா ராஜேஷும், “36 வயதில் மாரடைப்பு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுளே இது நியாயம் அல்ல,” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபுவும் பதிவிட்டுள்ளார்கள்.

நடிகர் சேதுராமனின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *