செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

புதுடெல்லி, அக்.1-

‘சூரரைப் போற்று’ படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் 2020-ம் ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்கள்துறை மந்திரி அனுராக் தாக்கூர், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா வரவேற்று பேசினார்.

விழாவில், வாழ்நாள் திரைப்பட சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது, பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட்டது.

ஜோதிகாவுக்கு

தங்கத்தாமரை விருது

சிறந்த படமான சூரரைப் போற்று படத்துக்கு தங்கத்தாமரை விருது வழங்கப்பட்டது. இதனை, படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டார். இதைப்போல சிறந்த இயக்குனருக்கான தங்கத்தாமரை விருதை ‘அய்யப்பனும், கோஷியும்’ மலையாள பட இயக்குனர் கே.ஆர்.சச்சிதானந்தன் சார்பில் அவருடைய மனைவி பெற்றுக்கொண்டார்.

மேலும் சிறந்த பொழுதுபோக்கு படமான தானாஜி(இந்தி), சிறந்த குழந்தைகள் படமான சுமி(மராத்தி), அறிமுக இயக்குனருக்கான படமாக மண்டேலா ஆகிய படங்களும் தங்கத்தாமரை விருதை பெற்றன.

தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான வெள்ளித்தாமரை விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. சூரரைப் போற்று படத்தில் அவரது சிறந்த நடிப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதைப்போல தானாஜி படத்தில் சிறந்த நடிப்புக்காக இந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது, சூரரைப் போற்று பட நடிகை அபர்ணா பால முரளிக்கு வழங்கப்பட்டது.

‘சூரரைப் போற்று’ படம் சிறந்த திரைக்கதை, பின்னணி இசை ஆகியவற்றுக்காகவும் வெள்ளித்தாமரை விருதை பெற்றது. திரைக்கதைக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோரும், பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாரும் விருது பெற்றனர்.

இதைப்போல ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற தமிழ்ப்படமும் 3 தேசிய விருதுகளைப் பெற்றது. தமிழில் சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகை ஆகியவற்றுக்காக விருது கிடைத்தது.

சிறந்த படத்துக்கான விருதை இயக்குனர் வசந்த் எஸ்.சாய், படத்தொகுப்புக்கான விருதை ஸ்ரீஹர் பிரசாத், துணை நடிகைக்கான விருதை லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோர் பெற்றனர்.

சிறந்த அறிமுக இயக்குனர் படமான ‘மண்டேலா’ படத்துக்கு சிறந்த திரைக்கதை வசனத்துக்காகவும் இயக்குனர் மடோன் அஸ்வின் விருது பெற்றார். மேலும், பல விருதுகளை பிற மொழி படங்கள் தட்டிச் சென்றன.

விருது விழாவில் நடிகர் சூர்யா சந்தனநிற பட்டு வேட்டி–-சட்டை அணிந்து பங்கேற்றார். இதைப்போல ஜி.வி.பிரகாஷ்குமார், மடோன் அஸ்வின் ஆகியோரும் வேட்டி-சட்டை அணிந்திருந்தனர். விருது பெற்றவர்களின் குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தாயாரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *