செய்திகள்

நடிகர் சிவகுமார் வரைந்த ஓவியங்கள் தொகுப்பு தபால் அட்டைகளாக வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஜன.30-

சென்னையில் நடைபெறும் தபால் தலை கண்காட்சியில், நடிகர் சிவகுமார் 1960-களில் வரைந்த ஓவியங்கள் தொகுப்பு தபால் அட்டைகளாக வெளியிடப்பட்டது.

இந்திய தபால் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் சார்பில், 14-வது மாநில அளவிலான தபால்துறை கண்காட்சி, (தநாபெக்ஸ்-2025), சென்னை செஷனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த தபால் தலை கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நடிகர் சிவகுமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். கண்காட்சி வருகிற பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சி தொடக்கவிழாவில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு முதன்மை தபால்துறை தலைவர் மரியம்மா தாஸ் ஆகியோர் நடிகர் சிவகுமார் 1960-களில் வரைந்த ஓவியங்களின் தொகுப்பை தபால் அட்டைகளாக வெளியிட்டனர். மேலும், மணப்பாறை முறுக்கு, தைக்கால் பிரம்பு கைவினைப் பொருள் மற்றும் கிழக்கு இந்திய லெதர் ஆகியவற்றின் சிறப்பு தபால் உறையும் வெளியிடப்பட்டது. தமிழர்களின் பண்டைய கால நடனங்களின் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நடிகர் சிவகுமார் ஆகியோர் தபால் தலை கண்காட்சியை பார்வையிட்டனர். தபால் தலை கண்காட்சியில் 510 காட்சி பலகைகள் இடம் பெற்றுள்ளன. 1852-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட தபால் தலைகள், தபால் உறைகள், மணியார்டர், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில், காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட பிரபலங்கள் உருவம் கொண்ட தபால் தலை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 80-வது பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய உருவப்படம் கொண்ட தபால் உறையும் இடம் பெற்றிருந்தது. அந்த உறையில், ‘உழைப்போம், உயர்வோம்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

தொடக்க நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலமாக பல்வேறு ஆய்வுகளை செய்து, தமிழர் பண்பாடு குறித்த உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது. இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் 5 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்று சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார். இதை காணும்போது, உலகிலேயே மிக பழமையான இரும்பு பயன்பாடு தமிழகத்தில்தான் இருந்துள்ளது தெரியவருகிறது.

சிந்து சமவெளி நாகரிக குறியீடுகள், தமிழகத்திலும் கண்டறியப்பட்டு உள்ளது. இதை காணும்போது, சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது தெரிகிறது. தமிழர் பண்பாடு மற்றும் நடனங்களை தபால் தலைகளாக வெளியிடுவதால் அது காலத்திற்கும் அழியாமல் இருந்து வருகிறது. இது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *