மும்பை, ஏப். 14–
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை அருகே பாந்த்ராவில் உள்ள இவரது வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் 4 முறை சுட்டனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கானுக்கு ’ஒய் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின்போது சல்மான்கான் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.