செய்திகள்

நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்

பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம்

சென்னை,மார்ச் 24–

நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்பிரமணியம் (வயது 85). நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அஜீத்குமாரின் சென்னை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல்நிலை குறைவால் பி.சுப்பிரமணியம் இன்று காலை காலமானார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நடிகர் சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பி.சுப்பிரமணியம் உடல் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்திற்குள் தந்தையின் உடலை அஜித்குமார் தூக்கி சென்றார். அங்கு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அஜித் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். குடும்ப வழக்கப்படி தந்தைக்கு இறுதிசடங்கை நடிகர் அஜித் செய்தார். பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொலைபேசியில்

ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் அஜித்குமாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது தந்தை மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *