சினிமா செய்திகள்

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்

திரையுலகினர் இரங்கல், அஞ்சலி

சென்னை, ஜூலை 15–

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து, நேரில் செலுத்தி வருகின்றனர்.

நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் பிரதாப் போத்தன். அவருக்கு வயது 69. சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள கிளேவ் சாந்த் அபார்ட்மெண்ட்டில் அவர் வசித்து வருகிறார்.

இன்று காலை 8 மணியளவில் அவரது வீட்டு சமையல்காரர் காபி கொடுப்பதற்காக பிரதாப் போத்தன் படுத்திருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சுயநினைவின்றி படுத்திருந்தார். உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக தகவல் கொடுக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் பிரதாப் போத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. பிரதாப் போத்தனின் உடல் அவரது வீட்டிலேயே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை வேலங்காடு ஈடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 1978ம் ஆண்டு இயக்குனர் பரதனின் ஆரவம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 1980களில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.

தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், தில்லு முல்லு, பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தகரம், ஆரோகணம், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான மலையாளத் திரைப்படங்கள் ஆகும். இவர் கடைசியாக மம்முட்டி நடித்த ‘சிபிஐ5: தி பிரைன்’ படத்தில் நடத்துள்ளார்.

தமிழில் முதல் முறையாக கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவர் பிரதாப் போத்தன். இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனம் இருக்கிறது.

பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985ல் திருமணம் செய்து 1986ல் விவாகரத்து செய்தார். பின்னர் 1990ல் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்தார். 2012ல் அவரையும் விவாகரத்து செய்தார். அவருக்கு கேயா என்ற மகள் உள்ளார்.

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்கள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.