சிறுகதை

நடமாடும் ஏடிஎம் | ராஜா செல்லமுத்து

தம்பி, வெயில் ரொம்ப அதிகமாயிருக்கு. பேங்கு வரைக்கும் போகணும். கூட வாரீயா? என்று அஞ்சுகம் பாட்டி மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசினாள்.

எந்த பேங்கு பாட்டி?

அங்கன இருக்கே கவுர்மெண்டு பேங்கு அதான் என்று தோய்ந்த குரலில் பேசிய பாட்டியை

“ம்” போகலாம் பாட்டி என்றான் அண்ணாதுரை

இந்த வெயில்ல ஏன் பாட்டி வந்தீங்க?

“என்ன செய்றதுப்பா, பேங்குக்கு வந்தா தான பணம் எடுக்க முடியும் என்று பேசிய அஞ்சுகம் பாட்டியை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு போனான் அண்ணாதுரை.

என்ன வெயிலுப்பா… உச்சி மண்டையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் “உர்”ன்னு வலிக்குது என்று எட்டு வைத்து நடக்கும் போதே முட்டியைப் பிடித்து நடந்து வந்தாள்.

“வேற யாரையாவது வரச் சொல்லி பணம் எடுக்கலாமே பாட்டி,

இல்லப்பா, நான் போயி தான் கைரேகை வைக்கணும். கையெழுத்து போடணும். அவரு போனதுக்கு அப்புறம் இப்படி நடையா நடந்து போயி தான் அந்த பென்சன் பணத்த எடுத்திட்டு இருக்கேன். பேங்குக்குன்னு வந்தா முழுசா ஒரு நாள் போயிருது. அதவிட ஒடம்பெல்லாம் ஒரு மாதிரியாவும் ஆயிருது என்று சொல்லிய அஞ்சுகம் பாட்டி கொஞ்சம் தடுமாறிய படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பாட்டி இதுதான் பேங்கா? ஆமாப்பா இதே தான்…. என்றவள், பத்து பதினைந்து படிகளுக்கு மேலே இருக்கும் அந்த பேங்குக்கு மெல்ல மெல்ல படி ஏறினாள்.

“உஷ்” யப்பா, எப்படி பொசுக்குது என்றவள் படிகளில் வைத்த காலை எடுத்து வைத்து எடுத்து வைத்து நடந்தாள். வாசல் வரை வந்த கூட்டம் அஞ்சுகம் பாட்டியை உள்ளே நுழைய விடாமல் செய்தது.

“பத்து” டோக்கன் நம்பர் பத்து” என்ற பதிவு செய்யப்பட்ட பேச்சு, அங்கு ஒலிக்க, ஓடும் நம்பரைப் பார்த்தாள். அஞ்சுகம் பாட்டி அது” நூற்றி இருபது என்று காட்டிக் கொண்டிருந்தது. ஐயய்யோ என்னது நூத்தி இருபதா?

இப்பதான், டோக்கன் நம்பர் பத்து போயிருக்கு. என்னைக்கு நூத்தி இருபது வாரது என்ற சலிப்பு அஞ்சுதத்திற்கு அதிகமாகவே இருந்தது. நேரே போனவள் டோக்கனை எடுத்தாள்.

அது நூற்றி இருபத்தி ஒன்று என்று வந்தது

“ம்ம்” என்னைக்கு இவ்வளவு நம்பர்களை கடக்கிறது . இப்பவே மணி பன்னெண்டு ஆக போகுது. இன்னைக்கு முழுசும் போயிரும் போல என்ற அஞ்சுகம் பாட்டி டோக்கனை எடுத்து கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தாள்.

பதினொன்னு, டோக்கன் நம்பர் பதினொன்னு, என்று பேச்சு வர ஓடும் நம்பரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சுகம். இந்த ஒரு பேங்குல தாங்க தெனமும் இவ்வளவு கூட்டம் இருக்கு. பென்சன், சம்பளம், பணம் போட, பணம் எடுக்கன்னு, எப்ப பார்த்தாலும் கூட்டம் பிதுங்கி வழியுது . இதுக்கு வேற வழியே இல்லையா? என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்.

ஆமாங்க, நீங்க சொல்றது உண்மைதான். இந்த பேங்குல எப்பவுமே கூட்டம் இருந்திட்டே தான் இருக்கும். அதிலயும் இந்த ரிடையர்டு ஆனவங்களோட பென்சன் அது இதுன்னு பாவம்ங்க இவங்கள நடக்க விடணுமா என்ன ? இதுக்கு ஒரு நல்ல வழி செய்யணுமே என்று ஒருவர் பேச,

“ஹலோ இத நாங்க எப்பவோ சொல்லிட்டோம். இவங்க தான் கேக்குறதில்ல என்று இன்னொருவர் சொல்ல, சார் அதுக்கு ஒரு நல்ல வழி பண்ணிட்டு தான் இருக்கோம்.

மொபைல் பேங்கீங்குன்னு ஒன்ன ஆரம்பிச்சு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அஞ்சு லட்ச ரூபாய எடுத்துட்டு ஒவ்வொரு ஏரியாவிலயும் போய் உட்கார்ந்திட்டோம்னா, அந்த ஏரியாவுல இருக்கிற வயசான ஆளுங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாயிருக்கும். அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் என்று நித்யா சொன்னபோது,

“யாருங்க அது” என்றார் வங்கி மேலாளர்.

“நானும் ஒரு கஸ்டமர் தாங்க ’’என்றாள் நித்யா.

“மொபைல் பேங்கு இருக்குங்க ”

ஆனா வண்டியில பணம் கொண்டு போறதில்ல

“ஓ, அப்படின்னா உங்க சர்டிபிகேட்ஸ குடுத்திட்டு தெனமும் அஞ்சு லட்ச ரூபா வாங்கிட்டு போயி நடமாடும் மொபைல் பேங்கிங் நடத்துறீங்களா? என்று மேலாளர் கேட்டபோது,

“ஓ” தாராளமா என்றாள் நித்யா

மறுநாளே, அவளின் சர்டிபிகேட்டை கொடுத்து அஞ்சு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு கிராமங்களுக்கு விரைந்தாள். அங்கேயே கைரேகை கையெழுத்து என்று வாங்கிக் கொண்டு வயதானவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தாள். கிராமங்கள் நித்யாவை வாழ்த்த ஆரம்பித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *