சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல்
புதுடெல்லி, பிப்.26-
நடப்பு நிதியாண்டில் 13 ஆயிரம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2019–20ம் ஆண்டில் 10,237 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டு உள்ளது. இது அடுத்த (2020–21) நிதியாண்டில் 13,327 கி.மீ.ராகவும், அதற்கு அடுத்த (2021–22) நிதியாண்டில் 10,457 கி.மீ.ராகவும் இருந்துள்ளது. 2022–23ம் நிதியாண்டில் 10,331 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வரிசையில் நடப்பு 2023–24ம் நிதியாண்டில் 13,813 கி.மீ. கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை நோக்கி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதில் கடந்த மாதம் வரை 7,685 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் மொத்தம் 13,000 கி.மீ. வரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள 2 மாதங்களில் 4,500 முதல் 5,000 கி.மீ. வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் 12,000 முதல் 13,000 கி.மீ. வரை நடப்பு நிதியாண்டில் அமைக்கப்படும். இது 2-வது அதிகபட்ச சாதனையாக இருக்கும்.
அதேநேரம் 4 வழிச்சாலையை பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில்தான் அதிக தூரத்துக்கு பணிகள் நடந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வேகம் மற்றும் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள் 9,500 கி.மீ. அளவுக்கு பணிகள் நடந்துள்ளன. இதுவும் அமைச்சகத்தின் சாதனை ஆகும்.
நெடுஞ்சாலை கட்டுமானத்தை பொறுத்தவரை ஜனவரி 2024 வரை, ஆண்டுதோறும் 10 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். அதேநேரம் நான்கு வழிச்சாலைகளின் கட்டுமானத்தின் அதிகரிப்பு 16 சதவீதமாக உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் ரூ.10,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடிக்கப்படும் என்று நம்புகிறோம்.
கடந்த ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு 60 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அதாவது 91,287 கி.மீ-ரில் இருந்து, 1,46,146 கி.மீ.ராக உயர்ந்து இருக்கிறது.
இதைப்போல 4 வழிச்சாலைகளின் நீளமும் 18,387 கி.மீட்டரிலிருந்து 46,179 கி.மீ.ராக அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு அனுராக் ஜெயின் கூறினார்.