மணி சுந்தர், ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் முதலாளி. நிறுவனம் தான் பெரிதாக இருந்தது தவிர அவரை யாருக்கும் பிடிக்காது. தான் சொல்வது தான் சட்டம். தான் செய்வது தான் செயல். அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் , அப்படிப் பின்பற்றவில்லையென்றால், அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதில் அவருக்குப் பிடிவாதம். அதனால் அந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் சிறிது காலம் வேலை செய்வதும், மணி சுந்தரின் நடத்தை பிடிக்கவில்லை என்றால் விலகிச் செல்வதுமாய் இருந்தார்கள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன்., ஏன் கம்பெனியை விட்டு ஆட்கள் போறாங்கன்னு தெரியலையே?”
என்ற ஒவ்வொரு நாளும் புலம்புவார் மணிசுந்தர். அவரால் ஊழியர்கள் விலகிச் செல்வது என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. நிறுவனம் சரியாக இயங்கினாலும் நிறுவனத்தின் முதலாளி சிடுமூஞ்சிக்காரர். மனிதர்களை அண்டாதவர். பணம் மட்டுமே குறிக்கோளாக இருப்பவர்
என்று அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் நிறைய இருந்தன. இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று போராடினார். ஆனால் முடியவில்லை .
புதிதாக அந்த நிறுவனத்திற்கு வந்த வசுந்தரா, முதலாளியின் நடவடிக்கைகளைக் கவனித்தாள்.
” சார் , நீங்க தான் என்னைய இந்த நிறுவனத்திற்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க. ஆனா உங்களுடைய முதலாளித்துவம் .தொழில் முறை எல்லாம் சரி. ஆனா, உங்க நடத்தை தான் கொஞ்சம் சரியில்லாம இருக்கு”
என்றாள் வசுந்தரா.
“என்னது, என்னுடைய நடத்தை சரி இல்லாம இருக்கா? நான் சரியாத்தானே நடக்கிறேன். இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க” என்று மணி சுந்தர் கேட்க
“இல்ல சார். நான் இந்த கம்பெனிக்கு வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சு. இந்த ரெண்டு மாசமா உங்களுடைய நடவடிக்கையை கவனிச்சிட்டு தான் இருக்கேன். உங்களுக்கு தகுந்தது மாதிரி தான் நீங்க நடந்துக்கறீங்களே தவிர மத்தவங்களுக்கு தகுந்த மாதிரி நடக்கத் தெரியல.
“எப்பவுமே ஒரு நிறுவனமோ? மனுசங்களோ? முதல்ல மனுசங்க கூட நல்லா பழகணும். நம்முடைய எண்ணங்களை நம்முடைய சிந்தனைகளை மத்தவங்க மேல திணிக்கக் கூடாது. அவங்க எப்படி இருக்காங்க? அவங்க நடவடிக்கை என்ன? அவங்க மனநிலை எப்படின்னு பாத்திட்டு தான், பழகணும். முதலாளித்துவம்ங்கிற தகுதி இருக்கு. அதைத் தலையில ஏத்தி வச்சிட்டு நடந்திங்கன்னா, கடைசி வரைக்கும் நீங்க தனி மனுசனா தான் இருக்கணும். எந்த மனுசனும் உங்க கூட ஒட்டப்போறதில்ல “
என்று வசுந்தரா சொல்ல, முதலில் அவள் சொன்னது, அவருக்குத் தலையில் ஏறாமல் இருந்தது. அன்று, இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை.
“வசுந்தரா சொன்னது உண்மையாக இருக்குமா ?”
என்று யோசித்துப் பார்த்தார், நாம வீட்ல கூட அப்படித்தான். மனைவி, குழந்தைகளின் எண்ணங்களுக்கு எதிரா தான் நடந்துக்கிறோம். அவங்க அன்பைக் கூட பெற முடியாம இருக்கோம்..ஆமா, வசுந்தரா சொன்னது உண்மை தான் என்று அவருக்கு நியாயமாகப்பட்டது. அன்றே தன் நடவடிக்கையை மாற்றிக் கொண்டார் அவருடைய முதலாளித்துவம், பணம் என்ற மாயை இதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, எதிரில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ? அதை எளிமையாக, சகோதரத்துவமாகப் பேசும்போது, அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள் மனிதர்கள்
“உண்மைதான், நாம் நினைத்ததை பேசக்கூடாது .நம் எதிரில் நிற்பவர்களின் நினைவை மனதில் கொண்டு தான் பேச வேண்டும். நம் எண்ணங்களை மற்றவர்கள் மீது திணிக்க கூடாது .அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுபடி தான் நாம் இருக்க வேண்டும் “
என்பதை உணர்ந்து கொண்டார் மணி சுந்தர்.
தன் நடவடிக்கையை மாற்றியதால் அன்றிலிருந்து அந்த நிறுவனத்தில் முதலாளி அல்ல. எல்லா ஊழியர்களின் நண்பராகவே திகழ்ந்தார் மணிசுந்தர். இப்போது அவரை எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது. தன்னை மாற்றிய வசுந்தராவைத் தன்னுடைய அறையில் இருந்து கவனித்தார்,
இது எதுவும் அறியாதவள் போல தன் வேலையில் மூழ்கி இருந்தாள், வசுந்தரா.
![]()






கதையின் கருத்து நன்றாக இருக்கிறது