மும்பை, ஜூன் 6–
ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நேற்று முன் தினம் முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்ட சஞ்சய், ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ விகிதம் குறைக்கப்படாமல் 6.5 ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 100 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. தொடர்ந்து, ஏப்ரல் மாதமும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 0.50 சதவிகிதத்தை குறைத்து 5.5% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()





