அலுவலகப் பணியை முடித்துவிட்டு மதுரையிலிருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தான் செந்தில். அவனுடைய சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவத்தை எண்ணி மனதிற்குள் சிலிர்த்தான். சில நேரங்களில் வாய்விட்டும் சிரித்துக் கொண்டிருந்தான். மதுரையில் புறப்பட்ட பேருந்து தேனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
டிக்கெட்…டிக்கெட் …. என்று தாேளில் பையைப் போட்டுக்கொண்டு பேருந்து முழுவதும் அங்கும் இங்கும் ஓடி ஆடி பயணிகளிடம் பணத்தை வாங்கி அதற்கு உண்டான பயணச் சீட்டைக் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடத்துனர். சிறுவயதாக இருந்த செந்திலுக்கு நடத்துனர் பணி ரொம்பவே பிடிக்கும். ஒரே இடத்தில் வேலை. அதுவும் மக்களோடு மக்களாக வேலை .பயணம் .காற்று. ஓடும் மரங்கள் என்று அந்தப் பயணத்தில் பேருந்து பயணம் செல்லும் போதெல்லாம் செந்திலுக்கு எப்படியும் நடத்துனராகி விட வேண்டும் என்று தான் அவனுக்குள் ஆசை இருக்கும். அந்த சிறுவயதில் அவனுக்குள் ஏற்பட்ட அந்த எண்ணம் நடத்துனரை பார்க்கும் போதெல்லாம் ஒரு வியப்பு ஏற்படும் .அது மட்டுமல்லாமல் அவர்கள் பணத்தை வாங்கி அந்த தோள் பையில் அடுக்கி வைக்கும் பங்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்களே? ஒரு நாளைக்கு இவ்வளவு பணம் சம்பாதித்தால் மாதத்திற்கு எவ்வளவு பணம் சம்பாதிப்பார்கள்? நமக்கு எந்த வேலையும் வேண்டாம். நடத்துனர் வேலை தான் வேண்டும். எந்த வேலைக்கு சென்றாலும் இவ்வளவு பணத்தை நம்மால் சம்பாதிக்க முடியாது நடத்துனர் வேலையில் தான் இவ்வளவு சம்பாதிக்க முடியும் “
என்று தன் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான் செந்தில். அதனால் ஒவ்வொரு முறை பயணப்படும் போதும் நடத்துனரின் நடவடிக்கைகள் அவர் பயணச் சீட்டை லாவகமாக அவர் கையில் பிடித்து இருக்கும் ஸ்டைல். விசில் அடித்து நிறுத்தங்களில் இறங்கச் சொல்லும் அழகு .இதையெல்லாம் உற்று உற்றுக் கவனித்துக் கொண்டே இருப்பான் . அதை அந்த நடத்துனரிடம் கேட்டே விட்டான்.
” சார் எனக்கு உங்க வேலை ரொம்ப புடிச்சி இருக்குது .நான் படிச்சு பெரிய ஆளாகி உங்க வேலைக்கு தான் வரணும்னு நினைக்கிறேன். நீங்க தினந்தோறும் நிறைய சம்பாதிக்கிறீங்க. உங்க கை நிறைய பணம் இருக்குது. இப்படிப்பட்ட வேலை தான் சார் எனக்கு வேணும்”
என்று அந்த நடத்துனரிடம் சொல்ல கடகடவென சிரித்த நடத்துனர்
” தம்பி நீ புரியாம பேசிட்டு இருக்க. நீ என்ன படிக்கிற ? என்று செந்திலைக் கேட்டுக் கொண்டே இரண்டு பேருக்கு
பயணி சீட்டைக் கிழித்து கொடுத்தார் அந்த நடத்துனர்.
” நான் அஞ்சாவது வகுப்பு படிக்கிறேன் சார் “என்றான் செந்தில் .
“அதான் உனக்கு புரியல தம்பி. இந்த பணத்தை வசூல் பண்ணி நான் வீட்டுக்கு கொண்டு போக மாட்டேன். .அரசாங்கத்துல கட்டணும். எனக்கு அரசாங்கம் சம்பளம் தருவாங்க . அதுதான் என்னுடைய வேலை. நீ நினைக்கிறது மாதிரி வசூல் பண்ற பணத்தை எல்லாம் வீட்டுக்கு நான் எடுத்துட்டு போக முடியாது. உன்னுடைய தவறான எண்ணத்தை நீ மாத்திக்க. நல்லா படிச்சு பெரிய ஆளா வா. அதுதான் உனக்கு நான் சொல்றது .நீ கற்பனை உலகத்தில் இருக்கிற. அதைத் தாண்டி உனக்கு உண்மை என்னன்னு தெரிகிற வயசு இப்ப இல்ல” என்று செந்திலின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வர ,பேருந்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான் செந்தில்.
” சார் தேனிக்கு ஒரு டிக்கெட் கொடுங்க”
என்று மதுரையிலிருந்து பேருந்தில் ஏறிய ஒருவர் நடத்துனரிடம் கேட்க , அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பயணச் சீட்டைக் கிழித்து கொடுத்தார் நடத்துனர்.
சின்ன வயதில் நடத்துனராகத்தான் ஆக வேண்டும். நடத்துனர்கள் தான் நிறையச் சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த செந்திலுக்கு இப்போது சிரிப்பு வந்தது. பேருந்தில் அங்குமிங்கும் அலைந்து அலைந்து பயணச்சீட்டைக் கொடுத்து பணத்தை வாங்கி தன் பையில் பாேட்டுக் கொண்டிருந்த நடத்துனரை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில்.
தேனியை நாேக்கி விரைந்து கொண்டிருந்தது பேருந்து.