செய்திகள்

நச்சு பாம்பைக் கூட நம்பலாம்; பாரதீய ஜனதாவை நம்ப கூடாது : மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

கொல்கத்தா, ஏப். 05–

நச்சு பாம்பைக் கூட நம்பலாம்; பாரதீய ஜனதாவை நம்ப கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:–

ஒரே நாடு, ஒரே கட்சி என்ற கொள்கையை மட்டுமே பாஜக பின்பற்றுகிறது. விசாரணை அமைப்புகள், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்றவை எல்லாம் பாஜக உத்தரவுப்படி செயல்படுகின்றன. இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக பின்பற்றுவதில்லை.

மத்திய விசாரணை அமைப்புகளின் அச்சுறுத்தலுக்கு திரிணமூல் காங்கிரஸ் அஞ்சாது. தேர்தலை முன்னிட்டு உள்ளூர் மக்களை எல்லை பாதுகாப்பு படையினர் துன்புறுத்தினால், அது குறித்து காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளிக்க வேண்டும்.

பாம்பை கூட நம்பலாம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிஷித் பிரமனிக் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் தற்போது பாஜக.வின் சொத்தாக, உள்துறை இணையமைச்சராகி விட்டார். 2021-ம் ஆண்டு சீதல்குச்சி பகுதியில் 5 பேரின் உயிரிழப்புக்கு காரணமான எஸ்.பி தேவசிஸ் தர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை பிர்பும் தொகுதியில் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

சட்டப்படியான குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றும் பொறிதான் சிஏஏ. அதை அமல்படுத்தினால் அடுத்து குடிமக்கள் தேசிய பதிவேடு (என்ஆர்சி) வரும். மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் அனுமதிக்க மாட்டோம். சிஏஏ வுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், நீங்கள் வெளிநாட்டினராக கருதப்படுவீர்கள்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு உங்களது பெயரை மீண்டும் பதிவு செய்யும்படி பாஜக கூறுகிறது. முறைகேடு செய்வதற்கு பெயர் பதிவை அவர்கள் மேற்கொள்கின்றர். நீங்கள் நச்சு பாம்பை நம்பலாம். ஆனால், ஒரு போதும் பாஜகவை நம்ப கூடாது. பாஜக நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது என்று மம்தா காட்டமாக கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *