திரையுலகினர் அஞ்சலி
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, நவ. 10–
வயது முதிர்வு காரணமாக நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷ் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திரை உலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் இரங்கல்
‘டெல்லி’ கணேஷ் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400–-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கலைஞரின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
விமானப்படையில்
பணியாற்றினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு என்ற ஊரில், 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ல் டெல்லி கணேஷ் பிறந்தார். இவரது இயற்பெயர் கணேசன்.
இந்திய விமானப்படையில் 1964ல் முதல் 10 ஆண்டுகள் பணியாற்றிய டெல்லி கணேஷ், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பணியை துறந்து நாடகங்களில் நடிக்க துவங்கினார். அங்கே “தக்ஷிண பாரத நாடக சபா” என்ற நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களிலும் நடித்தார்.
சென்னையில் நடிகர் ‘காத்தாடி’ ராமமூர்த்தியின் அறிமுகம் கிடைத்து. அதன் வாயிலாக “டௌரி கல்யாணம்” என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இதுவே சென்னையில் இவர் நடித்த முதல் மேடை நாடகம் ஆகும்.
நாடகத்திலிருந்து
சினிமாவில் அறிமுகம்
நாடகத்துறையிலிருந்து கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் 1977ல் குணச்சித்திர நடிகராக டெல்லி கணேஷ் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை வெறும் கணேஷ் என்று இருந்த இவரது பெயரையும் டெல்லி கணேஷாக மாற்றியவர் கே.பாலசந்தர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்–பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.
சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
மர்மதேசம், வீட்டுக்கு வீடு லூட்டி, மனைவி இப்படிக்கு தென்றல் உள்ளிட்ட டி.வி. சீரியலிலும், பல்வேறு குறும்படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். கைகளால் விருது
1979ல் இயக்குநர் துரை இயக்கிய “பசி” திரைப்படத்தில் ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக சென்னை பாஷை பேசி, தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி அனைவரது மனங்களையும் டெல்லி கணேஷ் வென்றார். இவரது நடிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருதினை டெல்லி கணேஷுக்கு அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். வழங்கி கவுரவித்தார்.
1993–94 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் கிடைத்தது. சமீபத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் டெல்லி கணேஷுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ– டப்பிங்–
தயாரிப்பாளர்
1980களில் “எங்கம்மா மகாராணி”, “தணியாத தாகம்” போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். நாயகனாக இவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால் மீண்டும் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றி நடித்தார்.
நடிகர் கமல்ஹாசனோடு இவர் இணைந்து நடித்த “நாயகன்”, “அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காம ராஜன்”, “தெனாலி”, “அவ்வை சண்முகி” உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. கடைசியாக கமல் நடிப்பில் வெளியான ‛‛இந்தியன் –2” படத்தில் இவர் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடனும் “பொல்லாதவன்”, “புதுக்கவிதை”, “எங்கேயோ கேட்ட குரல்”, “மூன்று முகம்”, “சிவப்பு சூரியன்”, “ஸ்ரீராகவேந்திரர்” என்ற ஏராளமான படங்களில் நடித்த பெருமையும் இவருக்குண்டு.
கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கிய டெல்லி கணேஷின் பயணம் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், அஜித், விஜய் காலம் வரை தொடர்ந்தது. இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி, ஏறக்குறைய தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி மற்றும் இன்றைய இளம் இயக்குனர்கள் வரை அனைவரோடும் பணிபுரிந்த இவர், இயக்குநர் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் திரைப்படங்களில் நடிக்காதது துரதிர்ஷ்டமே.
நடிகர் விஷ்ணுவர்த்தன், சிரஞ்சீவி, கிரிஷ்கர்னாட், நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன், ரவீந்தர் போன்ற நடிகர்களுக்கு பின்னணி பேசியதன் மூலம் ஒரு டப்பிங் கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் நடிகர் டெல்லி கணேஷ். தனது மகன் மகாதேவனை நாயகனாக்கி “என்னுள் ஆயிரம்” என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்.டெல்லி கணேஷ் மறைந்திருந்தாலும் அவர் நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத நினைவுகளாக பார்வையாளர்களின் நினைவுகளில் இருக்கும்.