செய்திகள் நாடும் நடப்பும்

நகர கட்டமைப்பு மேம்பட முதல்வர் ஸ்டாலின் கவனம்


ஆர். முத்துக்குமார்


கடந்த இரண்டு நாட்களாக சினிமா துறை பிரபலங்கள் இல்லங்களில் வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தி வருவது தெரிந்ததே. இதே திரைத்துறையில் இருந்து தான் மிக அதிக வருமானமும் வரி வசூலிப்பும் பெற்று தருவதையும் அறிவோம். அதற்கு நல்ல உதாரணம் உரிய நேரத்தில் அதிக வரியைச் செலுத்தியதற்காக பாராட்டையும் சான்றிதழையும் சூப்பர் ஸ்டார் ரஜினி பெற்றதையும் அறிவோம்.

அதுபோன்றே தான் வணிகவரித்துறையிலும் பதிவுத்துறையிலும் தமிழகத்தில் கூடுதல் வருவாய் அரசுக்கு ஈட்டி தந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை வரையிலான வருவாயைவிட இந்த ஆண்டு வணிக வரித் துறையில் ரூ.18,617 கோடியும் பதிவுத் துறையில் ரூ.2,376 கோடியும் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக வணிக வரித் துறை கடந்த ஜூலை மாதம் ஈட்டிய வரி வருவாய் ரூ.9,557 கோடி. இது கடந்த 2021–-22 நிதி ஆண்டில் ஜூலை மாதம் ஈட்டப்பட்ட ரூ.6,677 கோடியைவிட ரூ.2,880 கோடி அதிகம்.

நடப்பு 2022–-23 நிதி ஆண்டின் ஜூலை 31-ம் தேதி வரையிலான 4 மாதங்களில் மட்டும் வணிக வரித் துறை ரூ.47,056 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2021–-22 நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.28,439 கோடியைவிட இது ரூ.18,617கோடி அதிகம். இது 65.46 சதவீத வளர்ச்சியாகும்.

வரி ஏய்ப்பை தடுத்து, அரசுக்கு முறையாக வரவேண்டிய வரி வருவாயை விடுபடாமல் வசூலிக்க வேண்டும் என்று மண்டலம்தோறும் நடத்தப்படும் . ஆய்வுக் கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. துறைஅலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றி இந்த சாதனை வருவாயை ஈட்ட உறுதுணையாக இருந்தனர்.

இதேபோல பதிவுத் துறையில் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1,342.01 கோடி வருவாய் வந்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1,242.22 கோடியைவிட இது ரூ.99.79 கோடி அதிகம். நடப்பு 2022–-23 நிதி ஆண்டில் ஜூலை மாதம் வரை பதிவுத் துறையில் ரூ.5,718.90 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.3,342.87 கோடியைவிட ரூ.2,376.03 கோடி அதிகம். இந்த வகையில் பதிவுத் துறையிலும் வளர்ச்சி விகிதம் 71.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் இந்த 2 துறைகளும் தொடர்ந்து இதேபோல செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் சந்தித்த பல்வேறு இயற்கை சீற்றங்களையும் கொரோனா பெரும் தொற்று ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியைும் சாமர்த்தியமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சமாளித்து வருவதை கண்டோம்.

பருவமழை தொடங்கும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்ட நிலையில் மாம்பலம் பகுதி கால்வாய்கள், சுரங்கப்பாதை கால்வாய்கள், முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கிடாமல் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உரிய வகையில் செயல்பட வைத்தாக வேண்டும்.

பல இடங்களில் கால்வாய் பணிகள் துவங்கி சுறு சுறுப்பாகவே நடந்து கொண்டிருந்தாலும் ஏதேனும் காரணங்களுக்காக ஆமை வேகத்தில் நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கும் கிடுகிடு எனப் பணிகள் நடைபெற உத்தரவிட வேண்டும்.

மழை நேரத்தில் இதுபோன்று தோண்டப்பட்டு இருக்கும் பகுதிகளில் கால்நடைகள், பொதுமக்கள் நடந்து செல்லும் போது மழைநீர் தேங்கி இருக்க அதில் சிக்கிக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாக அல்லவா இருந்து விடும்.


Leave a Reply

Your email address will not be published.