செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு

சட்ட மசோதா நிறைவேறியது

சென்னை, செப்.17-

9 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி காலத்தை 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

தமிழ்நாடு மாநகராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதில், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டும். அதன் பிறகே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை நடத்த முடியும்.

இந்த பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே தற்போது முடிவுற்ற அந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை ஜூன் 30-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி வரை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மற்றொரு சட்ட மசோதாவில், புதிதாக மறுசீரமைக்கப்பட்ட நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களின் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவி காலத்தை டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கும் வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. பிச்சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் 2 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *