மாதத்தின் முதல் ஐந்தாம் தேதி வந்துவிட்டால் போதும் டான் என்று வாடகை பணத்தை குருசாமி இடம் கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் வீட்டை இரண்டாகி விடுவார். இதனால் குருசாமி வீட்டில் குடியிருக்கும் அத்தனை பேரும் நான்காம் தேதியே வாடகைப் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாகவும் திமிராகவும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார் குருசாமி. வெயில் ,மழை ,வெள்ளம், புயல் என்று எது வந்தாலும் அவருக்கு கவலை இல்லை. மாதம் பிறந்தால் போதும் ஐந்தாம் தேதி பணம் அவர் கைக்கு வந்து சேர்ந்துவிடும் இதனால் குருசாமி மனைவி பிள்ளைகள் என்று யாரும் எந்த வேலைக்கும் செல்வது கிடையாது. ஐந்து, ஆறு வீடுகள் வாடகைக்கு விட்டு அதிலிருந்து வரும் பணத்தை எடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவதில் இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது என்று சொல்லுவார் குருசாமி.
” இருந்தா வாழ்ந்தா குருசாமி மாதிரி வாழனும். அரசாங்க ஊழியர் மாதிரி மாதம் தவறாம அவர் கைக்கு பணம் வந்து சேருது. நாமளும் இந்த மாதிரி அஞ்சு ஆறு வீடுகள கட்டி வாடகைக்கு விட்டோம்னா வர்ற வாடகை பணத்த வச்சு வாழ்க்கை நடத் திரலாம் என்று பேசிக் கொண்டார்கள் குருசாமியின் நண்பர்கள்
” இந்த வீடு வாசல் வாடகை பணம் எல்லாம் சாதாரணமா வரல இதுக்கு பின்னாடி பெரிய வலி இருக்கு என்றார் பெரியசாமி
” அப்படி என்ன பெரிய சாதனை பண்ணி போட்டீங்க “
என்று யாராவது கேட்டால்
” ஏன் சொல்ல மாட்டீங்க. இன்னிக்கு நான் எந்த கஷ்டமும் இல்லாம வாழ்க்கை நடத்துறதுக்கு காரணம் இந்த நகரத்தில் இருக்கிற கட்டிடம் .ஆனா இந்தப் பணம் எங்கிருந்து வந்தது தெரியுமா? மூணு நாலு தலைமுறைக்கும் மேல விவசாயம் பண்ணிட்டு இருந்த குடும்பம் . எங்க தாத்தா அப்பன் நான் எல்லாரும் விவசாயம் பண்ணி .பார்த்தாேம் எல்லாம் விளைவிச்சு எல்லார் கையிலயும் கொடுத்தோம். கடைசியில் நஷ்டம் தான் ஏற்பட்டது .அவனவன் கோட்டு சூட்டு போட்டு இந்த பூமியில பந்தாக வாழ்க்கை நடத்தணும்னு நடத்துறான். நாங்க மட்டும் ஏன் சேறு சகதியில வாழணும் அதுலயும் நஷ்டப்பட்டு ஏன் வாழனும் .விவசாயம் பண்ணி பார்த்து கடைசில நொந்து போனது தான் மிச்சம் அதனால கிராமத்தில இருந்த விவசாய நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு வீடு கட்ட வித்துப்புட்டேன். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுதான் இந்த நகரத்தில் வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன். இந்த கட்டிடத்தை வாங்கி வாடகைக்கு விட்டுட்டு வாழ்ந்திட்டு இருக்கேன். இதில என்ன விசேம்னா விவசாயம் ஏமாத்துற மாதிரி இந்த வீடுகள் என்ன ஏமாத்துறதில்லை வாடகைக்கு குடியிருக்கறவங்க சரியா மாசம் பிறந்ததும் அஞ்சாம் தேதிக்குள்ள பணத்த கையில் கொடுத்துடுகிறாங்க. இதுனால எந்த தொந்தரவும் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கு. அப்படி யாராவது வாடகைக்கு பணம் கொடுக்கல அப்படின்னு தெரிஞ்சா அவங்கள அடுத்த நாளையே வீட்ட காலி பண்ண சொல்லிட்டு அடுத்த ஆள் வந்துருவாங்க . இந்த நகரத்துல வீடுகட்டி வாடகைக்கு விடுறதில இருக்கிற சுகம் வேறு எதிலும் இல்லை. விவசாய நிலம் எங்கள ஏமாத்துச்சு. இந்த வீடு எங்களை ஏமாத்தல”
என்று குருசாமி சொல்ல,
” இந்த விஷயம் நல்லா இருக்கே? ” என்று தன் கிராமத்தில் இருக்கும் நிலத்தை விற்பதற்காக சென்று கொண்டு இருந்தார் ஒருவர்.
#சிறுகதை