சென்னை, பிப். 5–
தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருக்கும் என்பதால், அடுத்த 1 ஆண்டில் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறார். கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை 76 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் விஜய் முகம் பொறித்த வெள்ளி நாணயம் வழங்கி தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
ஆண்களுக்கு நிகராக மகளிருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகளை நியமனம் செய்து அதன் பட்டியலை அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணம் செய்து நிர்வாகிகளை சந்திப்பதோடு, மக்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.