சென்னை, அக். 31–
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இடங்கள், திரைப் பிரபலங்களின் வீடுகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேற்றிரவு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்தவுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் சோதனை முடிந்தபின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று நிபுணர்கள் கண்டுபிடித்த பின்னர் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக பனையூரில் சில மணி நேரங்களாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





