சிறுகதை

தோஷம் | ஆவடி ரமேஷ்குமார்

தற்கொலை முயற்சியில் செத்துப்பிழைத்த நந்தினியை ஹாஸ்பிடலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள் ஞானசேகரன் தம்பதியினர். விஷயம் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் நந்தினியை வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். நந்தினியுடன் வேலை பார்க்கும் ராகவன், ஜெகதீஷ், விமலா, காயத்திரி, உமா ஐவரும் பழங்களுடன் வந்து பார்த்துவிட்டு காரணத்தை தெரிந்து கொண்டு ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டு சென்றனர்.

இரண்டு நாட்கள் சென்றது. அன்று மாலை நேரம் நந்தினியின் வீட்டின் முன் கார் வந்து நின்றது. ஜெகதீஷ் தன் பெற்றோருடன் இறங்கி வீட்டிற்குள் வருவதை பார்த்தாள் நந்தினி. ஜெகதீஷின் அம்மாவின் கைகளில் ஒரு தட்டும் அதில் பழங்கள், பூ, வெற்றிலைப்பாக்கு இத்தியாதிகள் இருந்தது. அவர்களின் இந்த திடீர் வருகையின் அர்த்தம் புரியாமல் நந்தினி, ஞானசேகரன், பார்வதி திகைத்தனர். “வாங்க வாங்க” என்று வரவேற்று ஹாலில் இருந்த ஷோபாவை காட்டி அமரச்சொன்னார் ஞானசேகரன். நந்தினியும் ஜெகதீஷ் அன்கோவைப் பார்த்து சிரித்து வரவேற்று விட்டு உள்ளறைக்கு சென்று விட்டாள்.

நேரடியா விஷயத்துக்கு வந்தர்றோம். ஜெகதீசும் நந்தினியும் ஒண்ணா ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறாங்க. ஜெகதீஷ்க்கு நந்தினியை பிடிச்சுப் போச்சு. அதான் முறைப்படி பெண் கேட்க வந்திருக்கோம். ஜெகதீஷின் அப்பா தான் இப்படி சொன்னார். விஷயத்தைக் கேட்ட ஞானசேகரன் அதிர்ந்தார்! ஒரு பக்கம் நந்தினிக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு என்று சந்தோஷப்படுவதா இல்லை முப்பது வயதாகியும் நந்தினிக்கு இருபத்தைந்துக்கும் மேல் மாப்பிள்ளை பார்த்து ‘செட்’ ஆகாத காரணத்தை சொல்லி புலம்பித்தீர்ப்பதா என்று குழம்பிப்போனார்.

பார்வதி நிலைமையை புரிந்து கொண்டு,”அது வந்துங்க… நந்தினிக்கு செவ்வாய் தோஷம்” என்று இழுத்து உண்மையை போட்டு உடைத்தாள். “சந்தோஷங்க” என்றார் ஜெகதீஷின் அப்பா.” இருபத்தைந்து வரன் பார்த்தேன். எல்லாம் சுத்த ஜாதகம்.செவ்வாய் தோஷமுள்ள வரன் கிடைக்கவே இல்லை. அந்த விரக்தியில் தான் நந்தினி தற்கொலை முயற்சியா தூக்க மாத்திரைகள் நிறைய விழுங்கி…”” எல்லாத்தையும் எங்க மகன் ஜெகதீஷ் எங்ககிட்ட சொல்லிட்டானுங்க.

ஜெகதீஷ்க்கு என்ன வருத்தம்னா இந்த செவ்வாய் தோஷம், நந்தினிக்கு இருக்குங்கிற விஷயத்தை அவளோட வேலை பார்த்த இந்த நாலு வருஷத்துல தெரிசுக்காம போயிட்டமேனு தான். அப்படின்னா உங்க மகனுக்கு…?” -பார்வதி.”

நந்தினியோட கதையே தான். அவனுக்கும் செவ்வாய் தோஷம்!- ஜெகதீஷின் அம்மா.

ஞானசேகரன் தம்பதியினருக்கு முகங்கள் குப்பென்று மலர்ந்தது. உள்ளறையில் ஜன்னலருகே நின்று உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த நந்தினிக்கு திடீரென்று உற்சாகம் பொங்க ஆரம்பித்தது. வெட்கப்பட்டபடியே வெளியே வந்தாள்.

என்னம்மா… இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா… தட்டை வாங்கிக்கலாமா? ஞானசேகரன் நந்தினியை பார்த்து கேட்க,” சம்மதம்ப்பா” என்றாள். தலையை குனிந்து கொண்டு மெல்ல ஓரக்கண்ணால் ஜெகதீஷை பார்த்தாள். அவனும் இவளையே பார்த்துக்கொண்டிருக்க-தலை நிமிர்ந்து கைகளை கூப்பி வணங்கினாள் அவர்கள் மூன்று பேரையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *