சிறுகதை

தோல்வி – ராஜா செல்லமுத்து

விறுவிறுப்பாக நடந்து கொண்ட நடந்துகொண்டிருந்த கபடி போட்டியில் கோவிந்தனை சேர்ந்த அத்தனை பேரும் பிடிபட்டு ஜீரோ மதிப்பெண் வாங்கினார்கள்

இது கோவிந்தனுக்கு ரொம்ப அவமானமாக இருந்தது.

எந்தக் கபடி போட்டிகளிலும் அவன் தோல்வி அடைந்தது இல்லை. ஆனால் இந்த போட்டியில் தோல்வியடைந்தது மட்டும் அல்லாமல் அவனுக்கு அவமானமும் சேர்ந்து வந்தது.

முதல் ரவுண்டில் தோல்வியை சந்தித்த அவன் தலை நிமிர முடியாமல் கீழே உட்கார்ந்திருந்தான் . அவன் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தன. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய உடம்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது .கோவிந்தனின் தோளை தொட்டார் மூர்த்தி….

என்ன கோவிந்தா தோத்துட்டேன்னு பயந்துட்டியா? என்று கோவிந்தனின் முகத்திற்கு நேராக கேட்டார் மூர்த்தி.

கோவிந்தன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான் .அவன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு இமையை விட்டு வெளியேற பார்த்தது

பயப்படாத முதல்ல தோல்வி அடைந்தவன் தான் இங்க நிறைய பேர் அடுத்தடுத்து வெற்றி பெற்றிருக்கிறாங்க. நமக்கு முதல்ல வைக்கிற அனுபவப் பாடம்னு நெனச்சுக்கோ. கவனி ,அடுத்த ஆட்டத்த கவனி… எப்படி ஜெயிக்கிறது அப்படிங்கறத கூர்ந்து பார்… கண்டிப்பாக வருவ, அடுத்த ஆட்டத்தில் அத்தனை பேருக்கும் தொட்டு நீதான் ஜெயிக்கணும் என்று மூர்த்தி கோவிந்தனுக்குள் உற்சாக வார்த்தைகளை ஊற்றினார்

துவண்டு போயிருந்த கோவிந்தனின் நெஞ்சில் மூர்த்தியின் வார்த்தைகள் மூர்க்கமாக விழுந்தன …நெஞ்சை நிமிர்த்தி இருந்தான்… தன்னை சேர்ந்த ஆட்களை அத்தனை பேரையும் தயார் படுத்தினான்.

அடுத்த அடி சரியாக இருக்க வேண்டும்… தோல்வி அடைந்து விடக்கூடாது என்று அத்தனை நண்பர்களையும் முறுக்கு ஏற்றினான்.

இரண்டாவது ரவுண்டுக்கு தயாரானார்கள்… கபடி காரர்கள்

முன்னாட்களில் இருந்ததைவிட இப்போது மும்மடங்கு வீரத்துடன் களம் இறங்கினான் கோவிந்தன்.

கபடி….. கபடி….. கபடி என்று அவன் சொல்லும் வார்த்தையே வைர கற்கள் போல் வந்து விழுந்தன.

அவன் உடம்பு முன்னைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. கபடி….. கபடி….. என்று பாடிக் கொண்டே வந்தான்… அவனின் கண்களும் கால்களும் வெற்றியை நோக்கிய பயணப்பட்டது .

கபடி….. கபடி….. என்று பாடிக் கொண்டே சென்றான்.

அவனை யாரும் பிடிக்க முன்வரவில்லை. அத்தனை பேரையும் ஒரே ஆட்டத்தில் தொட்டுவிட்டு தன் எல்லைக் கோட்டை அடைந்தான்.

சுற்றிக் கபடியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உற்சாக மிகுதியால் கோவிந்தனை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டாடினார்கள்.

இது எப்படி சாத்தியம்? ஒரே தடவை பாடிப்போய் அத்தனைபேரையும் தொட்டு வெற்றி பெற்று விட்டீர்கள்?

என்று கோவிந்தனிடம் கேட்டபோது கோவிந்தன் வீரமாக சொன்னான்.

முதலில் நான் சந்தித்த தோல்விதான் என்னை வெற்றி அடையச் செய்தது.

எப்படி தோற்றோம்? என்று சிந்தனை செய்தேன்… எப்படி தோற்க கூடாது என்பதையும் சிந்தனை செய்தேன். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று என் மனதில் உறுதியை நம்பிக்கையை இருத்திக் கொண்டேன்

அதோடு மூர்த்தியும் எனக்கு உற்சாக வார்த்தையை ஊற்றினார்.

இதோ வெற்றி பெற்றேன். இனியும் வெற்றி பெறுவேன். இனி என் வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது என்று ரொம்ப விவேகமாக சொன்னான்.

அந்தக் கபடி ஆட்டத்தில் கோவிந்தனைச் சேர்ந்த அணி கோப்பையை வென்று வெற்றி பெற்றது.

அதிலிருந்து அவன் எந்த கபடி விளையாட்டு போட்டிக்குப் போனாலும் முதல் பரிசும் வெற்றிக் கோப்பையையும் தட்டி வராமல் இருந்ததே இல்லை….

கோவிந்தனிடம் இந்த வெற்றியின் ரகசியத்தை கேட்டபோது,

அவன் சொன்ன ஒரே பதில், என்னை வெற்றி அடையச் செய்தது

என் தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *