ரமணி அந்த தெருவில் மூன்று குடித்தனம் உள்ள ஒரு பொது வீட்டில் ஒரு குடித்தனக்காரராக குடியிருந்தார். அரசாங்க பணியில் இருந்ததால் அவருக்கு என்று தனி மரியாதை நிலவியது. அவரது மனைவி சரோஜா பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ரவி. பல பேர்களுக்கு உதவும் மனப்பாண்மை எண்ணம் கொண்டவராய் ரமணி தன்னைக் காட்டிக் கொண்டாலும் உதவி என்று கேட்டால் உடனே செய்யாமல் இழுத்து அடிப்பதில் அவருக்கு ஒரு அலாதிப் பிரியம். சரோஜா தனக்கு என்ன வேலையென்றாலும் தானே பார்த்துக் கொள்வார். இவரிடம் சொன்னால் நேரத்துக்கு நடக்காது என்பதை அனுபவமாய் அறிந்ததால் தானே செய்து கொள்வார். மகனும் அப்பாவிடம் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டான். அவரும் மகன் விஷயத்தில் தலையிட மாட்டார். என்னே மகன் தந்தை உறவென சரோஜா புலம்புவார்.
அன்று அவர் குடியிருக்கும் பொது வீட்டில் உள்ள ஒருத்தருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ரமணி தான் நிறைய உதவிகள் செய்வது மாறி நடித்து விட்டு அவர்கள் சென்ற பின் ஆறு மணி நேரம் கழித்து அங்கு செல்லும் ஒருவரோடு சென்றார். வழி நெடுக நோய்வாய்ப்பட்டவர் குணங்கள் பற்றிக் கூறிக் கொண்டே வந்தார். மருத்துவமனை வாசல் வந்ததும் ரமணி கூட வந்தவரிடம் உள்ளே செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று கூறி நழுவி விட்டு பக்கத்தில் தெரிந்த கடைக்குச் சென்று பொழுதைப் போக்கி விட்டு ஒரு மணி நேரம் கழித்து மருத்துவமனை வாசல் வந்தவர், நோயாளிளைப் பார்த்து விட்டு வரும் அன்பரிடம் நலம் விசாரித்து விட்டு அவருடன் வீடு வந்து சேர்ந்தார்.
எந்தக் காரியம் ஆனாலும் தான் முன்னே நிற்பது மாதிரி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தனது யுக்தியை மனதில் தானே மெச்சிக் கொள்வார் ரமணி. கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் என்றால் கட்டாயம் கலந்து கொண்டு அவரைச் சுற்றி ஒரு சிரிப்புக் கூட்டத்தையே உருவாக்கி அகம் மகிழ்வார்.
இரண்டு நாட்கள் விடாமல் கலந்து கொண்டு மேற்பார்வை பண்ண மாதிரி தோற்றத்தை உண்டு பண்ணி விடுவார். ரமணி மாதிரி கலகலப்பான மனிதரைப் பார்க்க முடியாதென பெயர் எடுத்து விடுவார். மற்றபடி சுப நிகழ்வுகளுக்கு கவர் கொடுப்பதெல்லாம் சரோஜா தான்.
யாராவது தெருவில் இறந்து விட்டால் ரமணி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் மிகவும் வருத்தமாகப் பேசுவார். இறந்தவர் வீட்டின் வாசலுக்குப் பக்கத்தில் ரமணி வந்து நின்று விட்டு சென்றதற்கு அடையாளமாக ஒரு காரியம் செய்வார். தனது செய்கை மூலம் ரமணி இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு ஒரு தோற்றத்தை உருவாக்குவார். ஆனால் திடீரென்று காணாமல் போய் விடுவார். காரியங்கள் முடிந்ததும் அங்கு வந்து செல்வார். யாரும் நமது செயலை கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் வேறு அவருக்கு உண்டானது. இவரது செயல் தொடர்ந்து நடைபெற்றது. வருவது போல் பாவனை காட்டி விட்டு தப்பித்து விடும் தனது யுக்தியை எண்ணி அவர் மனதில் பெருமைப் படுவார்.
நாம் இரண்டு கண்ணால் பார்த்தால் நம்மை ஆயிரம் கண்கள் பார்க்கும் என்பதை மறந்த ரமணி தான் செய்வதே சரியென்பார். ஒரு தடவை அவர் நண்பர் என்ன உன் செய்கை வித்தியாசமாக உள்ளதே என்று கேட்க முடிந்தால் நீயும் கடைபிடி என்று சொல்லி நழுவினார்.
சில நாட்களாக ரமணியை வெளியே காண முடியவில்லை. ஏனெனில் ஊரிலிருந்து வந்திருந்த அவரது அப்பா சற்று உடல் நலம் குன்றியதால் கவனிக்க வேண்டிய பொறுப்பு ரமணி தலையில் விழுந்தது. இது தான் சமயம் என சரோஜா வெளி வேலைகளை எடுத்துக் கொண்டு இவரை வீட்டிலேயே அவரது அப்பாவை கவனிக்கும் பொறுப்பைத் தலையில் கட்டினார். அடுத்த சில நாட்களில் ரமணி அப்பா உடல் நிலை மோசமாகி அவர் பூவுலகில் இருந்து விடுதலையானார்.
ரமணி உடனே ராமன் அவர்களைத் தொடர்பு கொண்டு செய்தியைக் கூறினார். அடுத்த ஒரு மணித்துளியில் ரமணி வீட்டின் முன் நிறைய பாதணிகள் இருந்தன. ஆனால் ஒருவரையும் காணவில்லை. சரோஜா என்னங்க வீட்டின் முன் இவ்வளவு காலணிகள். ஆனால் ஒருவர் கூட இல்லையே என்றார்.
ரமணி தன்னை மறந்து கதறி அழுது நான் ஒவ்வொரு வீட்டிலும் செய்வதை இன்று ராமன் தலைமையில் நடந்தேறியுள்ளது என்றார். எனது யுக்தியை அவர்கள் செய்துள்ளார்கள் என்றார்,
உடனே சரோஜா கருமம் உங்களை எந்த நிலையில் வைத்துள்ளார்கள் பாருங்கள் என்று கூறி விட்டு, ராமன் அவர்களை தொடர்பு கொண்டு அவர் செய்கைக்கு மன்னிப்புக் கோரினார். பின் ராமன் தனது சகாக்களுடன் வந்ததும் ரமணி ராமன் அவர்களிடம் எனது ஈனத்தனமான யுக்தி தோற்றது, என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என்றார்.
உனது மனைவிக்காகத் தான் வந்தோம் என்றதும் ரமணி ஒரு பக்கம் அப்பா பூதவுடல், மறு பக்கம் தனது தோற்ற யுக்தி, பேச வார்த்தையின்றி மிரண்டு நின்றார். அப்பொழுது ராமன் ஆகட்டும் பாருங்கள் காரியத்தை என்றதும் தான் ரமணி நிம்மதியானார்.