செய்திகள்

தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்க மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம்

சென்னை, ஜன.9-–

தொழில் முதலீடுகளை மேலும் ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவை தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலக்கு பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, அனை வருக்கும் எல்லாம் என்பது தான். தி.மு.க. ஆட்சியில், தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஏற்றத்தாழ ஒரு லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளது. படித்த இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மிக தீவிரமாக செயல்பட்டு, அதுபோன்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்.

இந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் கருத்து ஆகும்.

தென் தமிழகத்திற்கும், மேற்கு தமிழகத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், வட தமிழகத்திற்கும் சென்னைக்கும் சேர்த்து அனைத்து பகுதிகளும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணியே இந்த முதலீடுகள் வரப்பெற்றுள்ளது.

28–ந்தேதி முதல் வெளிநாடு பயணம்

600-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2 நாட்களில் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்துக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க 28-ந்தேதி முதல் 15 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் செல்கிறார்.

உலக பொருளாதார மாநாட்டுக்கு செல்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை அறிவுறுத்தி உள்ளார். இந்த மாநாட்டின் மூலம் தொழில், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளிலும் முதலீடுகள் குவிந்துள்ளது. தோல் மற்றும் தோல் பொருட்கள் அல்லாத தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வெற்றிகளை உலகிற்கு உரக்க சொல்வோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *