செய்திகள்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா பயணம்

Makkal Kural Official

சென்னை, ஜூன் 29-–

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்கிறார் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதற்கு அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்து பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 24 சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டன. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் 37 சிப்காட் பூங்காக்கள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வரலாற்று சாதனையாக திகழ்ந்துள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் தொழில்துறை யில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 26 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அவற்றில் 379 புரிந்துணர்வுகளில் தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதன் மூலம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்போது வரை 60 சதவீதம் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டையில் புதிய சிப்காட்

புதுக்கோட்டையில் புதிய சிப்காட் உருவாக்கப்படும். தஞ்சாவூரில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மின்சார வாகனங்களுக்கான ‘சார்ஜிங்’ நிலையங்களை கூடுதலாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்திய அளவில் அதிக தொழிற்சாலை இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

கோவை விமான நிலைய விரிவாக்க பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான நிலம் எடுக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. வேலூரில் டைடல் நியோ பார்க் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் மற்றும் மதுரை டைடல் பார்க் நிறுவன பணிகள் தொடங்கப்பட உள்ளன. தூத்துக்குடி, சென்னை, கோவை, ஓசூர், ராணிப்பேட்டை என 5 மாவட்டங்களும் இந்தியாவின் ‘ஆட்டோ ஹப்’ கேந்திரமாக மாறி உள்ளன.

ஒரே ஆண்டில் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனம், ராணிப்பேட்டையில் டாட்டா லாண்ட்ரோவர் கார் நிறுவனம் ஆகியவை தமிழகத்திற்கு வந்திருப்பது மிகப்பெரிய வரலாற்று சிறப்பு.

இந்திய அளவில் அதிக தொழிற்சாலை இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

31 லட்சம் பேருக்கு

வேலைவாய்ப்பு

ஆண்டிற்கு 10 லட்சம் என்ற அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். 3 ஆண்டுகளில் ரூ,10 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது தொழில்துறை. உலக முதலீட்டாளர் மாநாடுதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, 9 பங்குதாரர் நாடுகளும் கலந்துக்கொண்டன.

அதில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 101 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார். அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, மீண்டும் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.

ஜப்பானில் முதலீட்டு மையம்

தமிழக சட்டசபையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

விமானம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடுகளை பெற தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை மற்றும் சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு வெளியிடப்படும்.

பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு பரவலாக ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் கோவையில் தொடங்கப்படும்.

ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு டோக்கியோவில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு உதவி மையம் உருவாக்கப்படும்.

சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஈர்க்க உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

குறு, சிறு தொழில்களுக்கு

ரூ.2,100 கோடி கடன்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.

காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமையப் பெற்றுள்ள தொழிற்சாலைகளின் தயாரிப்பு பொருட்களை ஒருசேர காட்சிப்படுத்த ஏதுவாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் தனித்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு பொருட்கள் காட்சி மையம் ரூ.5 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *