நாடும் நடப்பும்

தொழில் நுட்பம்… வரமா – சாபமா?


ஆர். முத்துக்குமார்


சென்ற வாரத்தில் இரு பெரிய விபத்துக்கள் விமானத்துறையை கதிகலங்க வைத்துள்ளது. அந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னணியில் தொலைத்தொடர்பு நவீனங்களின் இன்றைய வசதிகள், அதன் சாதக பாதகங்களை பற்றிய விழிப்புணர்வை தருகிறது.

உண்மையில் உலகையே கண் கலங்க வைத்த நிகழ்வு – நேபாள விமான விபத்தாகும். தரையில் இறங்க சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், நொடியில் போக்காரா விமான நிலையத்தை எட்ட இருந்த ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சுழன்றபடி தரையில் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

நேபாள தலைநகர் காட்மண்டுவில் நடந்த இந்த கோர விபத்தில் 68 பயணிகளும், நான்கு விமானிகளும் உயிர் இழந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள விசாரணை துவங்கிவிட்டது.

இந்த விபத்தை ஒருவர் தன் வீட்டில் இருந்து எடுத்த காட்சிகள் சில மணி நேரத்தில் இன்டர்நெட்டில் புயலாய் பரவியது. இறுதி கட்டத்தில் ‘சங்கு சக்கரம்’ போல் சுழன்று ஆகாயத்தில் இருந்து படுவேகத்தில் தரையில் விழுந்து நொறுங்குகிறது.இது எதேச்சையாக ஒருவர் எடுத்த வீடியோ, அந்த திடீர் விபத்தை படம் எடுத்து இருப்பது விந்தையான சமாச்சாரம்!

அதையும் விட விந்தையானது, மேலும் மர்மமான ஒன்றும் அந்த விபத்து ஏற்படும் நொடிகளில் அரங்கேறி இருக்கிறது.

ஒரு பயணி விமானத்தில் தரையிறங்கும் நேரத்தில் செல்போன் தொடர்பு கிடைத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் செய்துள்ளார்.

சில நொடிகளுக்கு சக பயணிகளின் முகத்தையும், தன் முகத்தையும் காட்டியபோது விமானத்தில் இருந்து அதிர வைக்கும் ஒலி – ஒளி எழ, அதை தொடர்ந்து இடி முழக்கத்துடன் அந்த விமானம் தரையில் சுழன்று விழுந்து சுக்குநூறாக சிதறுகிறது.

விமானம் பறக்கும்போது இன்டர்நெட் சேவை கிடைக்காது. தலை இறங்கிய நொடிக்குப் பிறகே செல்போனை இயக்க முடியும், அதன் பிறகே நெட் இணைப்பு கிடைக்கும்.

ஆனால் பறந்து கொண்டிருக்கும் ஒருவரால் அதிகவேக இன்டர்நெட் இணைப்பு கிடைத்து, பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பை செய்ய முடிந்தது விசித்திரம்! நம்பினால் நம்புங்கள் விவகாரமாகும்.

அப்படி ஒரு இணைப்பு சேவை கிடைத்துவிட்டால், விமானத்தில் ஏதேனும் தொலைதொடர்பு கோளாறுகளை ஏற்படுத்த சதிகாரர்களுக்கு வழி நிச்சயம் உண்டு.

அதை உறுதி செய்கிறது இதற்கு முந்தைய நாள் அமெரிக்கா முழுவதும் ஏற்பட்ட விமான சேவை முடக்கம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்று இதை அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை கூறிவிட்டாலும், அதைப் பற்றிய முழு விசாரணை துவங்கி விட்டது.

அந்த விசாரணை அறிக்கை சாமானியனின் பார்வைக்கு முழுமையாக வராது என்பதை அறிவோம்.

முதல் கட்ட அறிவிப்புகள் சுட்டிக் காட்டுவது அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையின் என்ஓடிஏஎம் தொழில்நுட்பத்தில் அன்று கோளாறு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விமான நிலையத்தின் எல்லையில், விமானத்தை இயக்கும் விமானி அதன் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருப்பார்.

அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் விமானக் கண்காட்சிகள், பாராசூட் சாகசம், பட்டம் திருவிழா, லேசர் நிகழ்ச்சி, ராக்கெட் சோதனை, போர் பயிற்சி, உயரமான கட்டிடங்களில் விளக்குகள் எரியாமல் இருப்பது, எரிமலை வெடிப்பு, பறவைகள் நடமாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்தும் கட்டுப்பாட்டு நிலையங்கள் மூலம் விமானிகளுக்குத் தெரிவிக்கப்படும். இந்த பாதுகாப்பு நடைமுறை என்ஓடிஏஎம் (NOTAM) என்று அழைக்கப்படுகிறது. விமானிகளுக்கு புரியும் வகையில் சில குறியீடுகள் மூலம் என்ஓடிஏஎம் அறிவிப்பு வழங்கப்படும்.உலகெங்கும் ஏற்பட்டு வரும் பல தலைவலிகளின் பின்னணியில் சூத்திரதாரிகளாக இயங்கும் அமெரிக்காவை நிலைகுலைய வைக்க ‘சைபர் யுத்த’ தாக்குதலை யாரேனும் நடத்தி இருப்பார்களா? என்று அச்சக் கேள்வியும் எழுகிறது.

அமெரிக்க தரப்பில் இது ரஷ்யர்களின் கைவரிசை என கூறுகிறார்கள், மேலும் சிலர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதி என்றும் கூற ஆரம்பித்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியோ தனது அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை அதிகாரிகள் வழியாக கூறியுள்ளது, “சைபர் தாக்குதல் நடந்ததாக தெரியவில்லை. எனினும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மீண்டு எழத் துவங்கிய கட்டத்தில் உக்ரைனில் சச்சரவு, இவற்றுடன் இப்படிப்பட்ட தொலைத்தொடர்பு காட்சிகள். மரணப்பிடியில் தவிக்கும் மனித குலத்திற்கு நிம்மதி பெருமூச்சு விட முடியாமல் தவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *