செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அங்கீகாரம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

சென்னை, ஜூலை 3–

தொழில் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அங்கீகாரம் மேலும் 3 மாத காலம் நீட்டித்து (செப்டம்பர் வரை) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு மாநிலம் தழுவிய ஊரடங்கினை அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் எடுத்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த 1.4.2020 அன்று முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981ன் படி 31.3.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் 31.3.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை மேலும் 3 மாதங்கள் அதாவது 30.6.2020 வரை செல்லத்தக்கபடி, நீட்டிப்பு செய்து வழங்கியது.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படும் நிலையில் உள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் – 1981 – ஆகியவற்றின் படி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை 30.6.2020 வரை செல்லத்தக்கபடி ஏற்கெனவே நீட்டிப்பு செய்து வழங்கியதை தற்போது, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உத்தரவின்படி, மேலும் மூன்று மாத காலங்கள் அதாவது செப்டம்பர் 30, 2020 வரை செல்லத்தக்கபடி நீட்டித்து வழங்கப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *