போஸ்டர் செய்தி

தொழில் துவங்க மானியம்; சலுகைகள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, செப். 10–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதிய ‘தகவல் தொழில்நுட்ப கொள்கை 2018’ஐ வெளியிட்டார்.

தகவல் தொழில் நுட்ப துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், என்ஜினீயர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த தொழில் நுட்ப கொள்கையில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சலுகைகளை பயன்படுத்தி தொழில் அதிபர்கள் அதிக அளவில் தொழில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

புதிதாக தொழில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மின் கட்டணம் இலவசம் மற்றும் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018 வெளியீடு நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் புதிய தொழில் நுட்பவியல் கொள்கை –2018ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

புதிய தொழில் நுட்பவியல் கொள்கை ஏராளமான சலுகைகளும், மானியங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

5 கோடி ரூபாயிலிருந்து 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மின் கட்டணம் கிடையாது.

50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை தொழில் முதலீடு செய்பவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை மின் கட்டணம் கிடையாது. இந்த நிறுவனம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் மின் கட்டணம் கிடையாது. 2 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

200 கோடி முதல் 500 கோடி வரை முதலீடு செய்பவர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். 4 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் மின் கட்டணம் கிடையாது.

நிபந்தனை

எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அத்தனை பேருக்கும் கண்டிப்பாக வேலை கொடுத்தாக வேண்டும். ஆரம்பத்தில் இவ்வளவு பேருக்கு வேலை தருவோம் என்று கூறிவிட்டு பின்னர் அவ்வளவு பேருக்கு வேலை தரவில்லை என்றால் அதனை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு தொழில் துவங்கலாம் என்று மாவட்டங்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பிரிவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல்வர் பேச்சுதொழில் கொள்கையை வெளியிட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

ஜெயலலிதாவின் தொலை நோக்கு பார்வை–2023ல் தமிழ்நாட்டிலுள்ள மாணாக்கர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நோக்கில் செயல் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அறிவித்திருந்தார். இதை முன்னெடுத்து செல்லும் வகையில்தான் அம்மா வழியில் நடக்கும் அம்மாவின் அரசு பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டமும்” தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை–2018ஐ வெளியிடும் நிகழ்ச்சியும் இன்று இங்கே நடைபெறுகிறது. அதை தலைமையேற்று நடத்தி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில், திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும் மற்றும் ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.

சிறப்பு மையங்கள்

மெசர்ஸ் சீமன்ஸ் மற்றும் டிசைன் டெக் லிமிடெட் என்ற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி மதிப்பீட்டில், இச்சிறப்பு பயிற்சி மையங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில் நுட்ப மாணவர்களுக்கும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பயிற்சி

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில், வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்வதைப் போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைத்திடும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில் நுட்ப பயிற்சி பெறும் பொருட்டு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பெரும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுவர்”, என்று அம்மா 23.8.2016 அன்று சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில் நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை செய்தார்.

வெளிநாடுகளுக்கு சென்றனர்

அந்த வகையில் 2016–17 மற்றும் 2017–18 கல்வியாண்டுகளில் 191 மாணாக்கர்கள், 15 நாட்களுக்கு ஸ்பெயின், தைவான், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிலகங்களில், தொழில்நுட்ப பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிக்காக, ஆண்டொன்றிற்கு 100 மாணாக்கர்களுக்கு 1.5 கோடி ரூபாய் அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. இந்த பயிற்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டிலுள்ள 7 கல்வி நிறுவனங்களில் தொழில் நுட்பக் கல்வித்தர மேம்பாட்டுத் திட்டம்– III மூலம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டு அக்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு புதிய கல்லூரிகளை பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கி வருவதாலும், முதல்தலைமுறை பட்டாதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கி வருவதாலும், விலையில்லா மடிக்கணினி, பின்தங்கிய மாணவர்களுக்கான உதவித்தொகை போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணாக்கர் சேர்க்கை விகிதம் 48.6 சதவிதம் உயர்ந்துள்ளது. இது தேசிய சேர்க்கை விகிதமான 25.8 சதவிகிதத்தை விட உயர்ந்ததாகும்.

தமிழகம் முதலிடம்

தேசிய அளவில் ஆராய்ச்சிப் படிப்பில் தமிழ்நாடு தான் முதன்மையான இடத்தில் உள்ளது என மத்திய அரசின் MHRD அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 2017–18ம் ஆண்டில் 29,778 ஆராய்ச்சியாளர்கள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், நிர்வாக மேலாண்மை ஆகிய துறைகளில் பி.எச்.டி, ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் பல்வேறு பொறியியல் சார்ந்த துறைகளில் 6,914 மாணாக்கர்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள். தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கும் உரிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இம் மாணவர்களுக்கான பயிற்சியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படித்த மாணாக்கர்கள் அனைவருக்கு அவர்களுடைய தகுதியை மேம்படுத்தவும், அத்தகுதிக்கு உரிய வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பது அம்மாவின் அரசின் நோக்கமாகும்.

இந்த இனிய விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழ்நாடு தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை–2018 முதல் பிரதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட காக்னிசன்ட் நிறுவனத்தின் சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ராம்குமார் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின், நீலோபர் கபீல், எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழிலாளர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசுச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசுச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள், நிர்வாக இயக்குநர்கள், கல்லூரி நிறுவனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *