செய்திகள்

தொழில்பயிற்சி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேச்சு

சென்னை, செப். 30–

தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயா தொழில் பயிற்சி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மகாத்மா காந்தி, ஆச்சாரியா வினோபாவே, சகோதரி நிர்மலா தேஷ்பாண்டே வழியிலான சேவை மனப்பான்மையே மனித சமூகத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அரிசன சேவா சங்கத்தில் செயல்படும் தக்கர் பாபா வித்யாலயாவில் படிக்கும் தொழில் பயிற்சி மாணவர்கள் (ஐடிஐ) மற்றும் மழலையர், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று காலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மேலும் 10 பேருக்கு அரிசன பந்து விருதுகளையும் வழங்கினார்.

இந்த விழாவிற்கு அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சங்கர் குமார் சன்யால் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரிசன சேவா சங்கத்தின் தலைவர் மாருதி முன்னிலையில், மக்கள் குரல், டிரினிட்டி மிரர் நாளிதழ்களின் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் சிறப்பு விருந்தினர் வெங்கய்ய நாயுடுவை வரவேற்று, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழாவில், வெங்கய்ய நாயுடு பேசியதாவது:–

தக்கர் பாபா வித்யாலயா, 2016 பெருமழையின் போது, மிகவும் பாதிக்கப்பட்டது. அதனை மீட்டுருவாக்கும் பணிக்கு பலரும் உதவி செய்தனர். நாம் இப்போது, செப்டம்பர் 11 ந்தேதி பிறந்த ஆச்சாரிய வினோபாவே, அக்டோபர் 2 ந்தேதி பிறந்த மகாத்மா காந்தி, அக்டோபர் 17 ந்தேதி பிறந்த காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோரின் பிறந்த நாட்களை முன்னிட்டு பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்கிறோம். இந்த விழாவுக்கு தலைமை தாங்கியுள்ள அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சங்கர் குமார் சன்யால் அவர்களுக்கும் 75 வது பிறந்த நாள். இவர் இப்போதும் ஓய்வின்றி, காந்திய கொள்கைகளை இந்தியாவில் மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் எடுத்து சென்று கொண்டுள்ளார்.

ஆசிரமமே ஆசி பெறும்

ஒரு முறை ஆச்சாரிய வினோபாவே பற்றி, காந்தியார் கூறும்போது, எனது ஆசிரமத்துக்கு ஆசி பெறுவதற்காக பொதுமக்கள் வருவார்கள். ஆனால், எனது ஆசிரமத்துக்கு வினோபாவே வந்தால், எனது ஆசிரமமே ஆசி பெரும் என்று தெரிவித்தார். மனித இனத்துக்கான சேவையை உயிர் மூச்சாக கொண்ட அத்தகைய சேவையாளர்கள் காந்தியாரோடு இணைந்து இந்த நாட்டுக்காக பணி புரிந்தார்கள். சர்வோதயா என்றால், அறிவியலும் ஆன்மிகமும் இணைந்தது. சர்வோதயாவை பரப்பும் பணியில் 14 ஆண்டுகள் 70 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து பூமிதான இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார் வினோபாவே.

இதுபோன்ற பெருந்தகையாளர்களின் பிறந்த நாட்களை கொண்டாடும் நாமும், அவர்களுடைய வழியை பின்பற்றி, ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். அரசுகளே மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து விட முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புறுதி திட்டத்தின் கீழான நிதியை, இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்களுக்கு செலவளிக்க வேண்டும். அதேபோல், செல்வந்தர்கள் தங்களால் ஆன உதவியை சமூகத்துக்கு செய்ய வேண்டும். இந்த சமூகத்துக்கான சேவையே மனித இனத்தை மேம்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது.

மக்கள் தங்கள் உரிமைக்காக போராடலாம். ஆனால், அந்த போராட்டம் கூட, சமூகத்தில் உள்ள மற்றவரை பாதிக்காத வண்ணம், அமைதி வழியில் சத்யாகிரக வழியில் காந்தியார் போல நடத்த வேண்டும். அதுவே அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும். இந்தியாவிலேயே தொழில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை இங்கு தொடங்கி வைத்துள்ளதன் மூலம், மாணவர்கள் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் படிக்க முடியும். இதுபோன்ற சேவைகளை, தங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் ஒரு தலை சிறந்த சமூகத்தை, ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

10 பேருக்கு விருதுகள்சேத்துப்பட்டிலுள்ள எஸ்ஆர்எஸ் மாணவிகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பாக தங்கி, தொழில்பயிற்சி, பாரா மெடிக்கல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை ஏழை, எளிய ஆதரவற்ற பெண்கள் படித்து வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள விடுதி மிகவும் பழுதாகி தங்க ஏதுவாக இல்லாததால், புதிய விடுதிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 4750 சதுர அடி பணிகள் நிறைவுற்ற நிலையில், மேலும் 4000 சதுர அடியில் சமையலறை, படிப்பு அறை, சாப்பிடும் அறை போன்றவைகள் கட்டுமான பணிக்காக நிதி உதவி செய்த, மனு கோயல் சார்பாக அவருடைய மனைவி பூஜா கோயல், எஸ்.சண்முக வடிவேல் குடும்பத்தின் சார்பாக சண்முக வடிவேல், புவனா உள்ளிட்ட 10 பேருக்கு அரிசன் பந்து விருதுகளையும் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

இந்த விழாவில், அரிசன சேவா சங்க மாணவர்கள், பெற்றோர்கள், கொடையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *